எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, பத்திரிகையாளர்களைத் தவிர்த்து, கைக்குட்டையால் முகத்தை மூடியபடி காரில் சென்றதுதான் அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதமாகியுள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் இது குறித்து தங்களுடைய விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில் கர்சீப் வைத்து முகத்தை மறைக்கவில்லை.. கர்சீப் வைத்து முகம் துடைத்ததை வேண்டுமென்றே அரசியலாக்குகிறார்கள் என எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, “முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் எள் அளவும் எனக்கு இல்லை..
நான் டெல்லிக்கு சென்றுள்ளேன்.. உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க சென்றுள்ளேன் என அனைத்து ஊடகங்களுக்கும் தெரியும். அப்படி இருக்கையில் நான் ஏன் முகத்தை மறைக்க வேண்டும். கர்சீப் வைத்து முகம் துடைத்ததை வேண்டுமென்றே அரசியலாக்குகிறார்கள். திமுகவின் எங்களை பற்றி விமர்சிப்பதற்கு எந்த அருகதையும் கிடையாது என்றார்.
தொடர்ந்து திமுக மும்பெரும் விழாவில் செந்தில்பாலாஜியை பாராட்டி மு.க.ஸ்டாலின் பேசியதை குறிப்பிட்ட இபிஎஸ், செந்தில்பாலாஜி அதிமுகவில் இருந்த போது அவரை விமர்ச்சித்து பேசிய வீடியோவை ஒளிபரப்பு செய்தார். மேலும், அதிமுக உள்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடவில்லை எனவும் குறிப்பிட்டார்.