அதிமுகவில் நிலவி வரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில், திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய குற்றச்சாட்டுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேறும் சிலர் தங்களின் முடிவுக்கு காரணம் காட்ட திமுகவை இழுத்துவருவதாக அவர் விமர்சித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “திமுக என்பது வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக சந்தித்த இயக்கம். 77 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் பல ஏற்றத் தாழ்வுகளை பார்த்திருக்கிறோம். 220 தொகுதிகளில் வெற்றி பெற்ற சாதனையும் எங்களுக்குண்டு; 1991-ல் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற அனுபவமும் எங்களுக்குண்டு. அதனால் வெற்றியால் மயங்கியதுமில்லை, தோல்வியால் துவண்டதுமில்லை” என்று கூறினார்.
மேலும், “சி.வி.சண்முகம் தொடர்ந்து முக்கிய பதவிகளில் இருந்தவர். 2021 தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்பட்டது. இருப்பினும், தற்போது வெளியேறுவதற்கான காரணமாக திமுகவை குற்றம்சாட்டுவது சரியல்ல. சிலருக்கு பதவி வெறி இருக்கும். எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்தக் கட்சிக்கே செல்லும் அரசியல் வடஇந்தியாவில் இருந்தது. தற்போது அதே நிலை தமிழ்நாட்டிலும் உருவாகும் வகையில் சிலர் செயல்படுகின்றனர்” என்றார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே திமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்று அறிவித்துவிட்டதாக கூறிய அவர், “அதிமுக உடைவதற்கு திமுகவை காரணமாக காட்டுவது வெறும் திசைதிருப்பும் முயற்சி மட்டுமே. அவர்கள் ஏற்கனவே வெளியேற முடிவு செய்துவிட்டார்கள். அதற்கான நியாயத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும், “விஜய் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் எதிர்த்துதான் ஆட்சிக்கு வந்துள்ளார். இப்போது அதிமுக நிர்வாகிகளை தன்னுடன் இணைத்துக்கொள்ளப் போகிறாரா என்பது அவரிடமே கேட்க வேண்டிய கேள்வி” என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
Read more: Breaking : முதல்வர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் போதைப் பொருள் தடுப்பு படை.. அரசாணை வெளியீடு..!



