சமையல் எரிவாயு சிலிண்டரை மீண்டும் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியில் மத்திய அரசு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இனி நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து வீட்டு உபயோக LPG நுகர்வோரும் 25 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இதற்கு முன்பு நகர்ப்புற LPG நுகர்வோருக்கு 25 நாட்களும், கிராமப்புற நுகர்வோருக்கு 45 நாட்களும் முன்பதிவு இடைவெளி இருந்தது. தற்போது கிராமப்புற நுகர்வோருக்கான 45 நாள் காத்திருப்பு 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற குடும்பங்கள் முன்பைவிட 20 நாட்கள் முன்னதாகவே அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து LPG விநியோகத்தில் அழுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து எரிவாயு தேவையை நிர்வகிக்கும் தற்காலிக நடவடிக்கையாக நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற நுகர்வோருக்கு வெவ்வேறு முன்பதிவு இடைவெளிகள் நிர்ணயிக்கப்பட்டன. நகர்ப்புறங்களில் 25 நாட்களும், கிராமப்புறங்களில் 45 நாட்களும் இடைவெளி பின்பற்றப்பட்டது.
தற்போது நாட்டின் LPG விநியோக நிலை மேம்பட்டுள்ளதுடன், சிலிண்டர் முன்பதிவுக்கான நிலுவையும் கணிசமாகக் குறைந்துள்ளது. இதையடுத்து முன்பிருந்த கட்டுப்பாட்டைத் தளர்த்தி, அனைத்து உள்நாட்டு LPG நுகர்வோருக்கும் ஒரே 25 நாள் முன்பதிவு இடைவெளியை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
புதிய விதியை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆகிய எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம் குறிப்பாக கிராமப்புற LPG நுகர்வோருக்கு இருந்த கூடுதல் 20 நாள் காத்திருப்பு நீங்கியுள்ளது. இனி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், முந்தைய சிலிண்டரை முன்பதிவு செய்த 25 நாட்களுக்குப் பிறகு அடுத்த சிலிண்டரை புக் செய்யலாம்.
சமையல் சிலிண்டரை முன்பதிவு செய்ய நுகர்வோருக்கு பல்வேறு வசதிகள் உள்ளன. சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ WhatsApp சேவை, மொபைல் செயலி, IVRS தொலைபேசி சேவை அல்லது பிற அதிகாரப்பூர்வ டிஜிட்டல் சேவைகள் மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யும்போது, எரிவாயு இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்துவது அவசியம்.
Also Read: பக்தர்கள் சென்ற வாகனம் மீது லாரி மோதி கோர விபத்து.. 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி; 15 பேர் காயம்!



