கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தில் பெற்றோரே பணத்திற்காக தங்கள் மகளை வெளிநாட்டில் உள்ள விபச்சார கும்பலிடம் விற்றதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மல்லேனஹள்ளி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (50) மற்றும் அவரது மனைவி கிராந்தி (48) ஆகியோர் ஹக்கி-பிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். வனப்பகுதிகளில் கிடைக்கும் அரிய மூலிகைகளை சேகரித்து விற்பனை செய்வதே இவர்களின் தொழிலாகும். இதன் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது இவர்களுக்கு வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, தொழில் தொடர்பாக இருவரும் தங்கள் 20 வயது மகள் நந்திதாவுடன் ஆப்பிரிக்க நாடான செனகலுக்கு சென்றிருந்தனர்.
அதன்பிறகு, ராஜசேகர் உடல்நலக் குறைவு காரணமாக தனியாக இந்தியா திரும்பியதாகவும், பின்னர் அவரது மனைவியும் நாடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், நந்திதா அவர்களுடன் வராதது உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து தொடர்ந்து விசாரித்தபோது, பெற்றோர் அளித்த பதில்களில் முரண்பாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து செனகலில் இருந்த மற்ற பழங்குடியினத்தவர்களிடம் விசாரித்த உறவினர்கள், நந்திதா அங்குள்ள விபச்சார கும்பலிடம் ரூ.7 லட்சத்திற்கு விற்கப்பட்டதாக தகவல் அறிந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், விபச்சார கும்பலின் கட்டுப்பாட்டில் இருந்த நந்திதா, உறவினர்களை ரகசியமாக தொடர்புகொண்டு, தன்னை மீட்குமாறு கண்ணீருடன் வீடியோ அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த தகவலின் அடிப்படையில் உறவினர்கள் உடனடியாக செனகலில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு உதவி கோரினர்.
இதையடுத்து இந்திய தூதரக அதிகாரிகள், செனகல் காவல்துறையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு, நந்திதாவை அந்த கும்பலிடமிருந்து மீட்டனர். தற்போது அவர் தூதரகத்தின் பாதுகாப்பில் இருப்பதாகவும், தேவையான நடைமுறைகள் நிறைவடைந்ததும் இந்தியா அழைத்து வரப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, நந்திதாவின் பெற்றோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நந்திதா இந்தியா திரும்பிய பிறகு அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பணத்திற்காக சொந்த மகளையே வெளிநாட்டில் உள்ள கும்பலிடம் விற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, கர்நாடக மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read: வசம்பின் அசத்தலான பாரம்பரிய பயன்பாடுகள்… தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!



