“ஆய்வு நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகமா?” ; மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணை!

எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்? என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கக்கூடிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்திலும் சில மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளிலும் இந்த திட்டமானது அமல்படுத்தப்படவுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழும் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கக்கூடிய திட்டமானது செயல்படுத்தப்படவுள்ளது.

செறிவூட்டப்பட்ட அரிசி என்பது உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் அந்த திட்டத்தை செயல்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கடலூரை சேர்ந்த கனிமொழி மணிமாறன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல தலசீமியா, அமீனியா போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அரிசியை மருத்துவர்கள் ஆலோசனைப்படிதான் உண்ண வேண்டும் என்ற எச்சரிக்கை வாசகத்தை அரிசி பையில் இடம்பெற செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் வெற்றிச்செல்வனும் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “அனைத்து ரேஷன் கடைகளின் முன்பும், தலசீமியா, அமீனியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி தான் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. எனவே, அரிசி பைகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறச் செய்யத் தேவையில்லை” என்று வாதிட்டார்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், “எந்தவிதமான அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. நாடாளுமன்றத்திலும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இந்தத் திட்டம் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்காணிக்கப் போகிறீர்கள் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Post

காசாவில் சோகம்! இறந்த தாயின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை 5 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த பரிதாபம்..

Fri Apr 26 , 2024
காசாவில் ஏவுகணை தாக்குதலின் போது உயிரிழந்த தாயின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்ட ஏழரை மாத குழந்தை, 5 நாட்களுக்கு பின்பு உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் காசா பகுதியில் உள்ள ராஃபா பகுதியை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்கள் நடைபெற்றது. இஸ்ரேல் விமானப்படை மற்றும் ராணுவம் நடத்திய இந்த தாக்குதலில் 16 குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் சப்ரீன் அல்-சஹானி, அவரது கணவர் […]

You May Like