நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சீன எல்லைப் பகுதியில் சிக்கியுள்ளனர். அவர்களில் பலர் பாதுகாப்பாக உள்ள நிலையில், 320 பேரை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் வெளியிட்டுள்ள தகவலில், மானசரோவர் புனித யாத்திரைக்காக சென்ற 400-க்கும் அதிகமான இந்தியர்கள் சீன எல்லைப் பகுதிகளில் தவித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் முதற்கட்டமாக 96 பேர் தரைவழியாக பத்திரமாக நேபாள எல்லைக்குள் அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும், காத்மாண்டு வந்தடைந்த தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் விமானம் மூலம் பாதுகாப்பாகப் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, சீன எல்லையில் எஞ்சியுள்ள பிற இந்தியர்களையும் பாதுகாப்பாக தாயகம் கொண்டுவர பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அனைத்து ஏற்பாடுகளும் போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேசமயம், பேரிடர் பாதித்த பகுதிகளில் இருந்த 320 இந்தியர்களை தற்போது வரை தொடர்பு கொள்ள முடியாத நிலை நீடிக்கிறது. இவர்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மாயமாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இவர்களுடன் வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ள 100 இந்திய வம்சாவளியினரும் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை தீவிரமாக கண்டறிந்து மீட்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.



