முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு, தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் சேவை மையங்களில் திடீர் ஆய்வுகள் மற்றும் அதிரடி கண்காணிப்புகள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் சென்னை தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் தவெக சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம், “நோயாளிகளிடம் மரியாதையின்றி பேசுவது, ஒருமையில் நடத்துவது போன்ற செயல்கள் இனிமேல் நடக்கக்கூடாது. நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் அலக்களித்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். குறிப்பாக மருத்துவமனையில் நோயாளிகளுக்குக் குடிநீர் வசதி கூட சரியாக இல்லாத நிலை இருப்பதை அறிந்த சரத்குமார், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களை உடனடியாக அழைத்து கடுமையாக கண்டித்தார்.
மேலும், “இது சாதாரண ஆய்வு அல்ல. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வருவேன். பணிகளில் அலட்சியம் காட்டினால் நடவடிக்கை தவிர்க்க முடியாது. முந்தைய அரசாங்கம் போல இனி இருக்காது” என அதிகாரிகளிடம் உரக்க கூறினார். மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளையும் நேரில் பார்வையிட்ட அவர், உடனடி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.
திடீர் ஆய்வின் போது எம்.எல்.ஏ சரத்குமார் காட்டிய அதிரடி நடவடிக்கை மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களிலும் அவரது இந்த நடவடிக்கை குறித்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Read more: வங்கதேசத்தில் இந்திய தூதரக அதிகாரி மர்ம மரணம்.. அலுவலக வளாகத்தில் சடலமாக மீட்பு!



