உலகப் புகழ்பெற்ற மதுரை மாநகரில் நடைபெறும் சித்திரை திருவிழா சிகர நிகழ்வான மீனாட்சி அம்மன்–சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம் இன்று விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த தெய்வீகத் திருமணம் மதுரை நகரையே ஆன்மிகக் களமாக மாற்றியது.
மதுரையின் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, வேத மந்திரங்கள், தேவாரம் மற்றும் திருவாசகம் பாடல்களுடன் தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருமண்டபத்தில், அன்னை மீனாட்சிக்கும் சொக்கநாதருக்கும் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்ட அந்த புனித தருணம் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், அதற்கு முன் திக்கு விஜயமும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை ரிஷப லக்னத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாண நேரத்தில் “மீனாட்சி… சொக்கநாதா…” என்ற பக்தர்களின் முழக்கம் கோவில் முழுவதும் ஒலித்தது. திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்ட தருணத்தில் பெண்கள் தங்களது தாலிச்சரடுகளை மாற்றி மாங்கல்ய பலம் வேண்டிக் கொண்டனர்.
இந்த விழாவை காண நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திரண்டனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேரடி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும், கோவில் வளாகம் முழுவதும் LED திரைகள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் திருக்கல்யாணத்தை கண்டு மகிழ்ந்தனர்.
வெயிலின் தாக்கத்தை குறைக்க, திருமண்டபத்தில் பெரிய அளவிலான குளிரூட்டும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை ஆன்மிக அழகை மேலும் உயர்த்தியது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுமார் 1.5 லட்சம் பக்தர்களுக்கு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை நடைபெற்ற மாப்பிள்ளை அழைப்பு விருந்துக்குப் பிறகு பக்தர்கள் திருக்கல்யாண மொய் எழுதி பிரசாதம் பெற்றனர். இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மொய் செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Read more: நெய்யை ஒரு போதும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. மீறினால் ஆபத்து தான்..!



