இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஃபுளோரஸ் தீவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கோர விபத்தில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 5.58 மணியளவில், 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதன் நிலநடுக்க மையம், கிழக்கு நுசா டெங்காரா மாகாணத்தில் உள்ள எண்டே நகரத்திற்கு வடமேற்கே 68 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இதுகுறித்து தேசிய பேரிடர் மேகாட்டு முகமையின் தலைவர் சுஹர்யான்டோ செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “38 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது; இருவர் படுகாயமடைந்துள்ளனர்; 11 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். மேலும், சுமார் 2,000 மக்கள் தாங்களாகவே முன்வந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி உள்ளனர்” என்று தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசிய அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கையை விடுத்தனர். 0.5 மீட்டர் முதல் 3 மீட்டர் (1.6 முதல் 9.8 அடி) வரை அலைகள் எழக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தகவல்படி, ஃபுளோரஸ் தீவில் உள்ள மௌமேரே நகரில் வசிக்கும் மக்களும் உயரமான பகுதிகளுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அப்பகுதியில் 19 முதல் 30 சென்டிமீட்டர் வரை சுனாமி அலைகள் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் முகமையின் நிலநடுக்க மற்றும் சுனாமி இயக்குநர் விஜயான்டோ கூறுகையில், “கிழக்கு நுசா டெங்காரா, தெற்கு சுலாவெசி மற்றும் மேற்கு நுசா டெங்காரா மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் சுனாமி பேரலையை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை சுனாமி மாதிரி முடிவுகள் காட்டுகின்றன” என்றார்.
இந்த கோர நிலநடுக்கத்தால் உள்ளூர் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதைக் காட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும், இந்தோனேசியக் கடற்கரையோரம் கடல் நீர் உள்வாங்கும் காட்சிகளும் பரவி வருகின்றன. மருத்துவமனை வாடிக்கையாளர் சேவை அதிகாரியான லுகாஸ் லோட்டார் கூறுகையில், “திடீரென நிலம் குலுங்கத் தொடங்கியது, நான் பீதியடைந்தேன். நோயாளிகளும் மருத்துவமனையை விட்டு வெளியே ஓடினார்கள், அதிர்வு மிகவும் வலுவாக இருந்தது. சில சுவர்கள் விரிசல் விட்டதை என் கண்களால் கண்டேன்” என்று தெரிவித்தார்.
ஜப்பான் தொடங்கி தென்கிழக்காசியா வழியாக பசிபிக் பெருங்கடல் படுகை வரை நீண்டுள்ள பசிபிக் “நெருப்பு வளையத்தில்” (Ring of Fire) இந்தோனேசியாவும் அதன் அயல்நாடுகளும் அமைந்திருப்பதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. 2000-ம் ஆண்டிற்குப் பிறகு இந்தோனேசியாவில் பதிவான மிகவும் கொடூரமான நிலநடுக்கம் 2004-ல் சுமத்திரா கடற்கரை பகுதியில் நிகழ்ந்தது. 9.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் சுனாமி பேரலையை ஏற்படுத்தி இப்பகுதி முழுவதும் 2,20,000 பேரின் உயிரைக் பலிவாங்கியது குறிப்பிடத்தக்கது.



