மன்னார் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் இதற்கு நிரந்தர தீர்வு கோரி கோரிக்கை வைத்து வந்தாலும் இந்த பிரச்சினை முடிந்தபாடில்லை. தமிழக முதல்வர் விஜய்யும் பிரதமர் மோடிக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வலியுறுத்தி வருகிறார்.
இந்தநிலையில், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி அத்துமீற் ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்ததோடு, படகு மீன்பிடி வலைகள், மீன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கனவே, சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் மாவீரன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், கடந்த வாரம், கச்சத்தீவு மற்றும் தனுஷ்கோடிக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது. சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அவர்களின் விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து இருந்தனர்.
எனவே, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய உடனடியாக மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.



