திமுக ஆட்சியில் ஊழல்கள் நடந்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தின் நான்காம் கட்டத்தின் முதல் நாளான நேற்று திருப்பரங்குன்றத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி; “மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. குடிநீர் வரி, கடை வரி, குப்பை வரியிலும் முறைகேடு செய்திருக்கிறார்கள். இதை நாம் சொல்லவில்லை. அரசு நடத்திய விசாரணையில் வெளிவந்துள்ளது, அதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேயரின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேயரின் ஒத்துழைப்பு இல்லாமல் முறைகேடு நடந்திருக்க முடியாது. எனவே, மதுரை மேயர் கைது செய்யப்பட வேண்டும். மதுரை மேயரைக் காப்பாற்ற திமுக அரசு முயல்கிறது. அதிமுக அரசு வந்தவுடன் முழு விசாரணை நடத்தி, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் பல மாநகராட்சிகளில் ஊழல் செய்த பணத்தைப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு, திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருகிறார்கள். காஞ்சிபுரம், நெல்லை, கோவையிலும் இவ்வாறு நடந்துள்ளது. மற்ற நகர்ப்புற பகுதிகளிலும் ஊழல்கள் நடந்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டம் – ஒழுங்கு டிஜிபி ஓய்வு பெற்றுவிட்டார். 3 மாதத்துக்கு முன்பாக புதிய டிஜிபிக்கள் பட்டியல் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அந்த பட்டியலில் இருந்து மூன்று பேரை பரிந்துரைப்பார்கள். அந்த மூவரில் இருந்து ஒருவரை மாநில அரசு தேர்வு செய்து டிஜிபியாக அறிவிக்க வேண்டும். இதுதான் சட்டம். இந்த பதவியைக் கூட உரிய நேரத்தில் நியமிக்க முடியாத, கையாலாகாத அரசு திமுக அரசு. புதிய டிஜிபி தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. 8 டிஜிபிக்கு பிறகு 9-வது டிஜிபியாக இருப்பவர் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. இந்த நிலையில் குறித்த காலத்தில் டிஜிபி நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஓய்வுபெறும் நாள் இந்த அரசுக்கு முன்பே தெரிந்தும், திட்டமிட்டு தங்களுக்கு வேண்டப்பட்டவரை நியமிப்பதற்காக சட்டப்படி நடந்துகொள்ளவில்லை. இதனால், தகுதியுள்ள 8 டிஜிபிக்கள் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு ஒரு டிஜிபி, தீயணைப்புத் துறைக்கு ஒரு டிஜிபி என 8 டிஜிபிக்களுக்கும் ஒவ்வொரு பொறுப்பு உள்ளது. அப்படி பொறுப்புமிக்க 8 டிஜிபிக்கள் விழாவில் பங்கேற்கவில்லை என்றால் இந்த அரசு எப்படி நடக்கும்? காவல் துறையிலேயே சரிவு ஏற்பட்டுள்ளது என்றார்.