பாகிஸ்தானில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட கடும் மருத்துவ அலட்சியம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஓராண்டுக்குள் 331 குழந்தைகள் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் உலக நாடுகளிடையே கடும் கண்டனத்தை கிளப்பியுள்ளது.
BBC நடத்திய ரகசியப் புலனாய்வில், மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமான செயல்பாடுகளே இந்தப் பரவலுக்குக் காரணம் என ஆதாரங்களுடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாகிஸ்தானின் டான்சா பகுதியில் உள்ள தாலுகா தலைமையக மருத்துவமனையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. புலனாய்வு வீடியோக்களில், ஒருமுறை பயன்படுத்தப்பட்ட ஊசிகளை மீண்டும் மீண்டும் குழந்தைகளுக்கு பயன்படுத்தியதும், கிருமி நீக்கம் இல்லாமல் சிகிச்சை அளித்ததும், கையுறைகள் அணியாமல் ஊழியர்கள் செயல்பட்டதும் பதிவாகியுள்ளது.
2024 நவம்பர் முதல் 2025 அக்டோபர் வரை ஓராண்டு காலத்தில் இந்த மருத்துவமனைக்கு வந்த சுமார் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 8 வயது சிறுவன் முகமது அமின் உயிரிழந்த சம்பவம் இந்த விவகாரத்தின் தீவிரத்தை வெளிக்காட்டியுள்ளது. சாதாரண சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்ற தனது மகன், பாதுகாப்பற்ற ஊசி முறையால் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்ததாக அவரது தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் காசிம் புஸ்தார் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். வெளியான வீடியோக்கள் போலியானவை என்றும், மருத்துவமனையின் நற்பெயரைக் கெடுக்க உருவாக்கப்பட்டவை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், பாகிஸ்தானில் இதுபோன்ற சம்பவங்கள் இது முதல் முறையல்ல. முன்னதாக சிந்து மாகாணத்தின் லார்கானா பகுதியில் ஒரே ஊசியைப் பயன்படுத்தியதால் 900-க்கும் மேற்பட்ட குழந்தைகள் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் மாகாண அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பு தனித்தனியாக விசாரணைகளை தொடங்கியுள்ளன. பாதுகாப்பற்ற மருத்துவ நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடற்ற கிளினிக்குகள் காரணமாக பாகிஸ்தானில் எச்.ஐ.வி பரவல் அதிகரித்து வருவது உலகளவில் கவலைக்கிடமான நிலையை உருவாக்கியுள்ளது.



