திமுகவை கண்டித்து சட்டமன்ற தொகுதி வாரியாக பாஜக சார்பில் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் வினோஜ் பி செல்வம் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, ஊழல் மலிவு, பல்கிப் பெருகியுள்ள போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு என சகல விதத்திலும் தோல்வி அடைந்த ஆட்சியை திமுக அரசு நடத்தி வருகின்றது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழக மக்களை எண்ணற்ற இன்னல்களுக்கு உள்ளாக்கியதோடு மட்டுமல்லாமல், மீண்டும் கவர்ச்சிகரமான போலி வாக்குறுதிகள், வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இரைப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலமாக மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று திமுக கனவு கண்டு கொண்டிருக்கிறது.திமுகவின் கோர பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால், மக்களை திமுக எப்படியெல்லாம் ஏமாற்றி வருகிறது, இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ள படுதோல்விகள் என்னென்ன என்பதையெல்லாம் மக்களிடம் எடுத்துக் கூறுவது ஜனநாயகத்தை விரும்புகின்ற, ஊழலை ஒழிக்க நினைக்கின்ற, ஒற்றை குடும்ப ஆட்சிக்கு எதிரான நம் அனைவரின் கடமையாகும். அந்த வகையில், தமிழக பாஜக தலைவரும், சட்டமன்ற கட்சி தலைவருமான நயினார் நாகேந்திரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி சட்டமன்ற வாரியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளது. வருகின்ற அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 30ம் தேதி வரையிலும் இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளன.
குறிப்பாக, 2011-2021 காலகட்டத்தில் ஆட்சியே இல்லாமல் சோர்வடைந்து கிடந்த திமுக, அடுத்து ஆட்சிக்கு வரும் நோக்கத்தில் நிறைவேற்ற இயலாத, கவர்ச்சிகரமான போலி வாக்குறுதிகளை தன் போக்கில் அள்ளி வீசியதையும், ஆட்சிக்கு வந்தபின் மக்களை எப்படி மோசடி செய்தது என்பதையும் எடுத்துக் கூறும் விதமாக ஆர்ப்பாட்டங்கள் அமைய வேண்டும் என்று மாநில தலைவர் அறிவுறுத்தியிருக்கின்றார்.மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஆசிரியர்கள், நெசவாளர்கள், தூய்மை பணியாளர்கள், தொழில்துறையினர் என திமுகவின் மோசடி வாக்குறுதிகளில் பாதிக்கப்படாத பிரிவினரே சமூகத்தில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து தரப்பினரையும் அக்கட்சி ஏமாற்றியுள்ளது.
அந்த வகையில், திராவிட மாடல் எனக் கூறிக் கொண்டு தோல்வி மாடல் ஆட்சியை நடத்தி வருகின்ற இவர்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில், இதன் முதல் கட்டமாக திமுகவினர் மற்றும் திமுக அரசால் தொகுதி அளவில் ஏற்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய பிரதான பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி மக்களின் ஆதரவுடன் மாபெரும் போராட்டங்களை களத்தில் முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளார்.