தவெக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். தவெகவுக்கான ஆதரவு கடிதத்தை விசிக தலைவர் தொல் திருமாவளவனிடம் இருந்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பெற்றுக்கொண்டார். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைய தேவையான பெரும்பான்மை கிடைத்த நிலையில் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் விசிகவின் இந்த நிலைபாடுகுறித்து சட்டமன்றக் குழு தலைவர் வன்னியரசு தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு விரிவாக பேட்டி அளித்தார். அவர் பேசுகையில், பெரும்பான்மையான தமிழக மக்கள் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வர வேண்டும் என எண்ணி வாக்களித்துள்ளனர். இடது சாரிகளின் முடிவு தான் எங்களின் முடிவு எனக் கூறியிருதோம். முன்னதாக சிபிஎம், சிபிஐ கட்சிகளின் தங்களின் ஆதரவை தவெகவுக்கு தெரிவித்தனர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவை எடுத்துள்ளார் என்றார்.
* விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைச்சரவையில் பங்கு பெறுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த வன்னியரசு, இடது சாரி கட்சிகளை போலவே நாங்களும் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்க உள்ளோம் என்றார்.
* ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற வாய்ப்பை ஏன் பரீசீலனை செய்யவில்லை என்ற கேள்விக்கு, முழுமையாக அந்த வாய்ப்பை நாங்கள் புறக்கணிக்கவில்லை. தற்சமயம் மட்டுமே இந்த முடிவு.. தலைவர் திருமா எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்றார்.
* விசிகவின் நிலைபாடு குறித்து நேற்று முதல் கால தாமதம் செய்யப்பட்டது ஏன் என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வன்னியரசு, என்னால் தான் இந்த காலதாமதம் ஆனது. என் பெற்றோருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக என் சொந்த ஊருக்கு சென்றேன். சட்டக்குழு தலைவரான நான் நேற்று இல்லாதது தான் தாமதத்திற்கு காரணம் என்றார்.
* திருச்சி கிழக்கு அல்லது பெரம்பூர் தொகுதியில் திருமா போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, கட்சி தலைவர்களின் விருப்பமும் என்னுடைய விருப்பமும் அதுதான் என்றார். சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று, அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் வரவேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம். தலைவர் திருமாவளவனின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்றார்.
* மாண்புமிகு அமைச்சர் வன்னியரசு என அழைக்க வாய்ப்பு இருக்குமா என்ற கேள்விக்கு, தலைவர் திருமாவின் அறிவிப்புக்காக காத்திருக்கிறேன் என்றார்.
* விசிக – திமுக கூட்டணி முறிந்து விட்டது எனக் கூறலாமா என்ற கேள்விக்கு, அப்படி கூற முடியாது. அரசியலமைப்பை பாதுகாக்க கூடிய பொறுப்பு எங்களிடம் உள்ளது. திமுக உடனான எங்களின் தோழமை எப்போதும் தொடரும். தவெகவுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துவிட்டது. இனியும் ஆளுநர் கால தாமதம் செய்யாமல் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.



