வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொகுதி பேரத்தை தொடங்கி, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
மற்ற கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை திமுகவில் இணைக்கும் பணியை செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். அதன்படி கடந்த சில நாட்களாக செந்தில்பாலாஜி கரூரில் முகாமிட்டு மாற்றுக் கட்சியினரை திமுகவுக்கு இழுத்து வருகிறார்.
அதிமுகவில் அங்கீகாரம் மற்றும் மரியாதை கிடைக்காமல் சிரமப்படும் சில முக்கிய தலைவர்கள், எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் திமுக பக்கம் நகர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர் மேற்கு நகரம், திருமாநிலையூர் பகுதியை சேர்ந்த அதிமுக, தேமுதிகவினர் நேற்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டார்கள்.
அதேபோல் தேமுதிக நகர துணைச் செயலாளர் ஈஸ்வரன், அதிமுக நிர்வாகிகள் யுவராஜ், குபேரன், சந்திரசேகரன் உள்ளிட்ட பலரும் திமுகவில் இணைந்துள்ளனர். கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கத்தில் இணைப்பு விழா நடைபெறுகிறது. மாற்று கட்சியினரை திமுகவுக்கு இழுக்கும் இந்த அதிரடி ஆட்டம் கரூர் கோவையில் தொடர்ந்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.



