தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த 11 வகையான மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மேற்கொண்ட ஆய்வில், குறிப்பிட்ட சில மதுபானங்களில் அனுமதிக்கப்படாத செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து என்ரிகா நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்டுள்ளவற்றில் 10 வகை பிராந்தி மற்றும் ஒரு ரம் வகை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,மொத்த விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் ஆகியோர் இந்த தயாரிப்புகளை நுகர்வோருக்கு விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய உத்தரவு வெளியாகும் வரை தடை தொடரும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல், என்ரிகா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்டின் மேற்கூறிய 11 வகை மதுபானங்களை குடோன்களில் இருந்து சில்லறை கடைகளுக்கு மாற்றுவதையும் நிறுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற விற்பனை மையங்களிலும் இந்த தயாரிப்புகளை விற்பனை செய்ய அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யவும், உணவு பாதுகாப்பு தரநிலைகளை கடைப்பிடிக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



