தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டும் அதிமுக, இதனைக் கண்டித்து வரும் 17-ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் தயாராகிவிட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை திமுக ஒருபுறம் மேற்கொண்டு வருகிறது.
மறுபுறம் திமுக-வைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருப்பவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என அனைவரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக கழகத்தின் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக களத்திற்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO), பெரும்பாலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் அல்லாது வேறு நபர்களாகவே உள்ளனர். இதைப்பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, ஏற்கெனவே நியமிக்கப்பட்டு ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் பணியில் சேராத காரணத்தால் புதியவர்களை நியமித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் `உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் `மக்களை தேடி மருத்துவம்’ பணிகளுக்காக தாற்காலிகமாகப் பணியாற்றி வரும் தன்னார்வலர்கள் என்ற பெயரில் திமுக நிர்வாகிகளால் நியமிக்கப்பட்ட திமுக-வினரின் குடும்பத்தினர் மற்றும் அனுதாபிகளாகவே உள்ளனர். இவர்கள் தேர்தல் ஆணையத்தால் தெரிவித்துள்ளபடி வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து SIR படிவங்களை வழங்கும் பணியை செய்யாமல், அப்பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் அலுவலகத்திலோ அல்லது அவர்களது வீட்டு வாசலிலோ அமர்ந்து, அங்கு திமுக-வினர் மற்றும் திமுக அனுதாபிகளை மட்டும் வரவழைத்து ளுஐசு படிவங்களை அளித்து பூர்த்தி செய்ய வைத்து பெறுகின்றனர்.
இதன் காரணமாக, மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் படுக்கையில் இருப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர இயலாத நிலையில், கணக்கெடுப்புப் படிவத்தை பதிய முடியாமல் தங்கள் வாக்குரிமையை இழக்கும் நிலை உருவாகும். மேலும், இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டை வாக்குப் பதிவு ஆகிய விபரங்களை BLO-விடம் வழங்கினாலும் அவர்கள் அதனை வாங்க மறுக்கின்றனர்.
திமுக-வைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிகாரிகளின் துணையோடு திமுக-வினர் மற்றும் அவர்களுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு மட்டுமே படிவங்களை அளித்தும், மற்றவர்களை புறக்கணிக்கும் வேலைகளில் ஈடுபட்டும் வருகின்றனர். இதுபோன்ற மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டு வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஆட்சி அதிகாரத்தைப் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுக-வினரால் நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளுக்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் சார்பில், 17.11.2025 – திங்கள்கிழமை காலை 10 மணியளவில், எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



