சென்னையில் நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’-ல், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் புதியதாக 1,06,998 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய புதிய தவெக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களிலேயே மாநிலத்திற்குள் ரூ.1,02,514 கோடி அளவிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் ரூ.4,476 கோடி மதிப்பிலான 8 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதோடு, ரூ.2,676 கோடி முதலீட்டிலான 5 முடிவுற்ற திட்டங்களையும் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். மேலும், சிப்காட், டிட்கோ மற்றும் டிஎன்பிஎல் நிறுவனங்களின் சார்பில் ரூ.777.74 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட 13 புதிய கட்டடங்கள் மற்றும் 2 முக்கிய தொழிற்சாலைகளையும் அவர் திறந்து வைத்தார். தனியார் நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்ட 20 இளைஞர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் அவர் நேரில் வழங்கினார்.
இந்நிகழ்வில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சர்வதேச அளவில் வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு மற்றும் செமிகண்டக்டர் தொழில்நுட்பங்களைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் கஜகஸ்தான், நியூசிலாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் முன்னணி அமைப்புகளுடன் 7 சிறப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் கோவையில் செமிகண்டக்டர் பயிற்சிக்காக ரூ.75 கோடியில் புதிய மையம் அமைவதும், பாஷ் (Bosch) நிறுவனத்துடன் இணைந்து நவீன தொழில்நுட்ப மையங்களை உருவாக்குவதும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் தூத்துக்குடியில் ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ (ரூ.250 கோடி) மற்றும் ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ (ரூ.400 கோடி) ஆகிய நிறுவனங்கள் ஏவுகலன் உற்பத்தி மையங்களை அமைக்கவுள்ளன. அதேபோல், வாகன உற்பத்தியில் கிருஷ்ணகிரியில் ‘அல்ட்ராவயலட்’ மின்சார வாகன ஆலையும் (ரூ.779 கோடி), காஞ்சிபுரத்தில் ‘ஜே.கே. டயர்’ (ரூ.5,143 கோடி) மற்றும் ‘டைம்லர்’ (ரூ.4,000 கோடி) நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களும் வரவுள்ளன. சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ‘சூப்பர் மைக்ரோ’ சர்வர் உற்பத்தியையும், திருவள்ளூரில் ஜப்பானின் ‘YKK’ நிறுவனம் ஜிப்பர் உற்பத்தியையும் (ரூ.1,651 கோடி) மேற்கொள்ளவுள்ளன.
இந்த முதலீட்டு ஒப்பந்தங்கள் சென்னை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, கோவை, கிருஷ்ணகிரி மட்டுமின்றி இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவலாக செயல்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாகப் பெருந்தொழில் திட்டம் தொடங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. உயிரியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நுகர்வோர் இலேக்ட்ரானிக்ஸ் எனப் பல துறைகளில் இத்திட்டங்கள் பரவியுள்ளதால் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் சீரான தொழில் வளர்ச்சியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



