வந்தே மாதரம் பாட தமிழக அரசாங்கம் மறுத்துள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
2025-ம் ஆண்டு வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளைக் குறிக்கிறது. பங்கிம்சந்திர சட்டர்ஜி எழுதிய நமது தேசியப் பாடலான “வந்தே மாதரம்”, 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி அக்ஷய நவமி அன்று எழுதப்பட்டது. வந்தே மாதரம் முதன்முதலில் இலக்கிய பத்திரிகையான பங்கதர்ஷனில் அவரது ஆனந்தமத் நாவலின் ஒரு பகுதியாக வெளியானது. தாய்நாட்டை வலிமை, செழுமை மற்றும் தெய்வீகத்தின் உருவகமாக கூறும் இந்தப் பாடல், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் விழிப்புணர்வை கவிதை ரீதியாக வெளிப்படுத்தியது. இது விரைவில் தேச பக்தியின் நீடித்த அடையாளமாக மாறியது.
தேசிய பாடல் வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150-வது ஆண்டுகள் ஆனதையொட்டி ஓராண்டு கால கொண்டாட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி இந்திரா காந்தி உள் விளையாட்டரங்கில் நவம்பர் 07 அன்று தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி போன்ற முக்கியமான இடங்களில் வந்தே மாதரம் பாட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. வந்தே மாதரம் பாட தமிழக அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; “வந்தே மாதரம்” பாடல் நம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் இதயத் துடிப்பாகத் திகழ்ந்து, தேசமெங்கும் எழுச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திய மாபெரும் தேசபக்திப் பாடலாகும்.அந்தப் பாடலின் 150ஆம் ஆண்டு நினைவு நாளை, கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சி. அவர்களின் சிலை முன்னர் கொண்டாட “இந்திய எதிர்ப்பு” நிலைப்பாடு கொண்ட திமுக அரசு அனுமதி மறுத்துள்ளது. பதவியேற்றபோது எடுத்துக் கொண்ட அரசியலமைப்பு உறுதிமொழியையே திமுக அரசு மறந்து விட்டது போலத் தெரிகிறது.திமுகவின் இந்திய எதிர்ப்பு முகம் இச்சம்பவத்தில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
இதையே தொடருங்கள்… இன்னும் ஆறு மாதங்கள்தான். கூடிய விரைவில் நீங்கள் வீட்டுக்குச் செல்லப் போகிறீர்கள்.“வந்தே மாதரம்” பாடலைப் பாடுவதற்கு அனுமதி மறுத்த தமிழக அரசுக்கும் சிறைத்துறைக்கும் எனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். திமுக அரசு நாட்டுப்பற்றை மறைமுகமாக ஒடுக்க முயல்கிறது.ஆனால் தமிழகம் தேசபக்தியின் நிலம் – அதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.



