ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்நாடு மாவட்டத்தைச் சேர்ந்த சீனு – கங்கா தம்பதியரின் மகள் சவுடேஸ்வரி. அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவரம் சவுடேஸ்வரியின் தந்தை சீனுவுக்கு தெரியவந்தது. நாகராஜ் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்த காதலுக்கு சீனு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், “நான் நாகராஜையே திருமணம் செய்கிறேன்” என்று சவுடேஸ்வரி உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சவுடேஸ்வரிக்கு வேறு வரன் பார்த்து, ஒரு பள்ளி ஆசிரியருடன் திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்து நிச்சயதார்த்தமும் நடத்தினர். திருமண ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சவுடேஸ்வரி காதலனுடன் வெளியேறினார்.
இதனால் தந்தை சீனு மகள் வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை திருடி சென்றுவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில், சவுடேஸ்வரி – நாகராஜ் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, புதுமண தம்பதியை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துவந்தனர். அங்கு, “நான் மேஜர்… என் விருப்பப்படி தான் இந்த திருமணம் நடந்தது. நான் வீட்டில் இருந்து எந்த நகை, பணமும் எடுக்கவில்லை” என்று சவுடேஸ்வரி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் போலீசார் சமாதானம் பேசி, 5 நாட்கள் தாய் வீட்டில் இருந்துவிட்டு கணவருடன் செல்லுமாறு அறிவுறுத்தியதால், சவுடேஸ்வரி தந்தையுடன் சென்றார். ஆனால், கடந்த மார்ச் 18-ஆம் தேதி சவுடேஸ்வரி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
முதலில் குடும்பத்தினர் தற்கொலை என கூறிய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அது கொலை என தெரியவந்தது. இதையடுத்து சீனுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், மகளை தானே கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். மனைவி மற்றும் மகனை வெளியே அனுப்பிவிட்டு, உறவினர் ஒருவரின் உதவியுடன் தலையணையால் அமுக்கி கொலை செய்து, அதை தற்கொலையாக மாற்ற முயன்றது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..! ஏப்ரல் 10 முதல் சுங்கச்சாவடிகளில் இது நிறுத்தப்படும்..!



