2026-ல் அதிமுக ஆட்சியில் உயர்த்தப்பட்ட வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணம் குறைக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று குன்னூர் தொகுதியில் பேசிய அவர்; திமுக ஆட்சிக்கு வந்து 52 மாதம் முடிந்தது, இன்னும் 7 மாதமே இருக்கிறது. குன்னூருக்கு ஏதாவது பெரிய திட்டம் வந்திருக்கிறதா..? இதே அதிமுக ஆட்சியில் எல்லா மாவட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட மக்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டால் மேட்டுப்பாளையம், கோவைக்குப் போக வேண்டிய நிலை இருந்தது. அதனால் சிறப்பான மருத்துவ சிகிச்சைக்கு 400 கோடி ரூபாயில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்தேன். அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கான மருத்துவமனையை கொடுத்தோம்.
நீலகிரியில் ஆன்லைன் பாஸ் முறை வந்துள்ளது. திமுக நீதிமன்றத்தில் சரியாக வாதாடாத காரணத்தினால் இப்படிப்பட்ட நிலை வந்திருக்கிறது. குறிப்பிட்ட அளவு வாகனம் தான் நீலகிரி செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீசனில்தான் அவர்களுக்குப் பிழைப்பு நடக்கும். விடியா திமுக அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால் இன்றைக்கு 6 ஆயிரம் வாகனத்துக்கு மேல் வர முடியாது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நீதிமன்றத்தில் மக்களின் பிரச்னையை எடுத்துச்சொல்லி இதற்கு ஒரு தீர்வு காணப்படும்.
மலைப்பகுதி மக்கள் வீடு கட்ட சிரமப்படுகிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, கூடலூர் 3 தொகுதிகளிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடு கட்ட வேண்டும் என்று விண்ணப்பித்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான அனைவருக்கும் அனுமதி கிடைக்கும். திமுக ஆட்சியில் உயர்த்தப்பட்ட வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணம் குறைக்கப்படும்.
நீலகிரி மலை கிராமம், ஏழை மக்கள் நிறைந்த பகுதி. ஏழை, விவசாய தொழிலாளி, தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ் மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் என்றார்.