தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையில் உருவாக்கியுள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் இக் கூட்டணியில் கடந்த 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஒரு சில கட்சிகள் இன்னும் இணையாமல் இருக்கின்றன. அந்தக் கட்சிகளையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கொண்டு வருவதற்கான முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக இறங்கியுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மக்கள் நீதி மையம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. திமுக கூட்டணியில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலின் போது பெரிய அளவில் மாறுதல் இருக்காது. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் கூட்டணிக்கு வரும் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தார். இது மிகப்பெரிய பேசப்பொருளாக மாறியது. இந்த நிலையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்கள் பேசிய அவர்; தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைப்பது இயல்பு தான். கடந்த கால தேர்தல்களில் ராஜாஜி, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தனித்தனியாக கூட்டணி அமைத்து தான் ஆட்சிக்கு வந்தனர். ஆனால், கூட்டணி ஆட்சி நடக்கவில்லை. கூட்டு அமைச்சரவையை அமைக்கவில்லை. கூட்டணி என்பது வேறு, ஆட்சியை யார் நடத்துவது என்பது வேறு. 2026-ல் ஆட்சியை அதிமுக தான் நடத்தும். அதில் மற்ற கட்சிகள் பங்கு பெறுவதற்கு இடமே கிடையாது.
மெகா கூட்டணி அமைப்பேன், திமுகவை வீட்டுக்கு அனுப்புவேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெளிவாக கூறியுள்ளார். நிறைய கட்சிகள் நாங்கள் கூட்டு அமைச்சரவையில் பங்கேற்போம் என்று கூறுகின்றனர். அது அவர்களது ஆசையாக இருக்கலாம். அதிமுக தொண்டர்களும் சரி, மக்களும் சரி கூட்டு அமைச்சரவை ஏற்கமாட்டார்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.



