தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. இதனால் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் பலமுனை போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி ஒருபக்கம் வலுவாக உள்ளது. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே கடந்த வாரம் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதனைத்தொடர்ந்து அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6-ம் தேதி அறிவித்தார். மேலும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்தார். இதனிடையே செங்கோட்டையன், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒன்றிணைய உள்ளதாக ஒரு தகவல் வெளியானது.
இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதாகவும், கடைசி நிமிடங்களில் கூட கூட்டணி மாறலாம் எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக மற்றும் பாமக உட்கட்சி விவகாரங்கள் பாஜக தலையிடாது. பேரவை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதாகவும், கடைசி நிமிடங்களில் கூட கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவில் நிலவும் உள்கட்சி பிரச்சனையால் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.