தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 4 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை கட்சியினர் வெளியிட்டு வருகின்றனர்.
தேர்தல் காலங்களில் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள் முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். முதியோர் உதவி தொகை 1500 இல் இருந்து 2000 ரூபாயாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 1500 லிருந்து 2500 ரூபாயா உயர்த்தப்படும். மகளிர் உரிமைத்தொகை 2 ஆயிரமாக உயர்த்தப்படும். வீட்டு உபயோக பொருட்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு 8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் போன்ற பல வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தது.
திமுக வெளியிட்டுள்ள 525 வாக்குறுதிகள் மக்களிடையே கவனம் பெற்ற நிலையில், கவர்ச்சிகரமான பொய்கள் என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு மீண்டும் கவர்ச்சிகரமான, பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்ற நினைக்கிறது. இல்லத்தரசி கூப்பன், இலவசங்கள் என அறிவித்துள்ள திமுக, இன்று ‘டிபார்ட்மெண்டல் கட்சி’ ஆக மாறியிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றாத நிலையில், தற்போது மீண்டும் இலவசங்களை முன்வைத்து வாக்குகளைப் பெறத் திமுக துடிக்கிறது. திமுக-விற்கு இனி கனவிலும் கூடத் மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். திமுகவின் ஊழல் அரசியலை மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். தமிழகத்தின் வளர்ச்சிக்கும் திமுக-வின் குடும்ப அரசியலுக்கும் இடையிலான போராக இந்தத் தேர்தல் இருக்கும் என்று அவர் சாடினார்.



