தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளது. இதனால் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் பலமுனை போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி ஒருபக்கம் வலுவாக உள்ளது. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
அரசியலுக்கு புதிதாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான தவெக தனித்து களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. வழக்கம் போல சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவே அதிக சான்ஸ் உள்ளது. இப்படி பலமுனை போட்டி ஏற்படும் நிலை உள்ள நிலையில், தமிழகத்தில் மக்கள் மனநிலையைப் பற்றி, சாணக்யா டிவி வெளியிட்ட கருத்துக் கணிப்பு பல்வேறு வாக்காளர் எண்ணங்களை வெளிக்கொணந்துள்ளது.
மொத்தம் 2,989 வாக்காளர்களிடம், 32 சட்டமன்ற தொகுதிகளில் நடத்தப்பட்ட இந்த சர்வே, தற்போதைய ஆட்சியின் நிலைப்பாட்டையும் எதிர்கால அரசியல் சமன்பாட்டையும் பிரதிபலிக்கிறது. மத்திய பாஜக ஆட்சியைப் பற்றி 32% பேர் “சூப்பர்” என்றும், 44% பேர் “பரவாயில்லை” என்றும் கூறியுள்ளனர். இதேவேளை, மாநில திமுக ஆட்சியைப் பற்றி 45% பேர் “மோசம்” என்று மதிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இது, மாநில நிர்வாகத்திற்கான வாக்காளர் அதிருப்தி மெதுவாக உருவாகி வருவதை காட்டுகிறது.
முதல்வர் ஸ்டாலின் செயல்பாட்டை 41% பேர் “மோசம்” என மதிப்பிட்டிருப்பதும், ஆட்சிக்குள் செயல்திறனும் மக்கள் நம்பிக்கையும் இடையே தூரம் அதிகரித்துள்ளதை வெளிப்படுத்துகிறது. அதேசமயம், நடிகர் விஜயின் அரசியல் முன்னேற்றம் குறித்து 47% பரவாயில்லை என கூறியுள்ளது அவரது எதிர்கால அரசியல் பாதையை இன்னும் தெளிவுபடுத்த வேண்டியதைக் குறிக்கிறது.
சுவாரஸ்யமாக, “விஜய் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும்?” என்ற கேள்வியில் 61% பேர் அதிமுக-பாஜக கூட்டணியைத் தேர்வு செய்துள்ளனர். இன்றே தேர்தல் நடந்தால் அதிமுக-பாஜக கூட்டணி 39% வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருக்கும் என சர்வே கூறுகிறது. அதே நேரத்தில், தவெக 20% வாக்குகளைப் பெற்று வளர்ச்சி பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவுகள், தமிழக அரசியலில் எதிர்வரும் மாதங்களில் கடுமையான அரசியல் மறுசீரமைப்பை சுட்டிக்காட்டுகின்றன. வாக்காளர்கள் “மாற்றம் வேண்டும்” என்ற மனநிலையில் இருக்கிறார்கள்; ஆனால் அந்த மாற்றத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உறுதி இன்னும் உருவாகவில்லை.



