ராஜஸ்தானின் பிரபலமான உணவுகளில் தால் பாட்டிக்கு தனி இடம் உண்டு. நெய் மணம் வீசும் பாட்டியுடன் பஞ்ச்மெல் பருப்பு சேர்த்து பரிமாறப்படும் இந்த உணவு, அதன் தனித்துவமான சுவை மற்றும் நிறைவான தன்மைக்காக விரும்பப்படுகிறது.
பாரம்பரிய பாட்டிக்கு புதிய சுவையையும் கூடுதல் ஊட்டச்சத்தையும் சேர்க்கும் வகையில், ஊறவைத்த பாசிப்பருப்பை பயன்படுத்தி மூங் தால் பாட்டி தயாரிக்கலாம். செஃப் அருணா விஜய் பகிர்ந்துள்ள இந்த முறையில், வழக்கமான ஓவன் தேவையில்லை. வீட்டில் இருக்கும் அப்பே பாத்திரத்திலேயே பாட்டியை சமைக்க முடியும்.
முதலில் ஒரு கப் மஞ்சள் பாசிப்பருப்பை நன்றாக ஊறவைத்து, தண்ணீரை வடித்துக்கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் அதை கொரகொரப்பாக அரைக்க வேண்டும். முழுவதுமாக விழுதாக அரைக்காமல் இருப்பது பாட்டிக்கு நல்ல பதத்தை கொடுக்கும்.
அரைத்த பருப்புடன் 2 டேபிள்ஸ்பூன் நெய், ஓமம், சிறிதளவு பெருங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத் தூள், உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்க்க வேண்டும். இதனுடன் ஒரு கப் கோதுமை மாவையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் பயன்படுத்தி கெட்டியான பதத்தில் மாவாக பிசைய வேண்டும்.
பின்னர் மாவை சிறு உருண்டைகளாகப் பிரித்து பாட்டி வடிவில் தயார் செய்ய வேண்டும். அப்பே பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு, உருண்டைகளை அதில் வைத்து மிதமான தீயில் வேகவைக்க வேண்டும். அவ்வப்போது திருப்பி விடுவதன் மூலம் அனைத்து பக்கங்களும் சமமாக வெந்து பொன்னிறமாக மாறும். உள்ளேயும் நன்றாக வெந்ததும் பாட்டியை எடுத்துக்கொள்ளலாம்.
இதற்கு துணையாக பஞ்ச்மெல் தால் தயாரிக்கலாம். பச்சைப் பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, மசூர் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை கழுவி, தேவையான தண்ணீருடன் குக்கரில் வேகவைக்க வேண்டும். பருப்புகள் நன்றாக வெந்ததும் லேசாக மசித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தாளிப்பதற்கு கடாயில் நெய் சூடாக்கி, பெருங்காயம், காய்ந்த மிளகாய் மற்றும் நசுக்கிய பூண்டு சேர்க்க வேண்டும். பூண்டு நன்றாக மணம் வந்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து உடனடியாக வேகவைத்த பருப்பை ஊற்ற வேண்டும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட வேண்டும். இறுதியில் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்தால் பஞ்ச்மெல் தால் தயார்.
சூடான பாட்டியை உடைத்து அதன் மீது சிறிதளவு நெய் ஊற்றி, பஞ்ச்மெல் தாலுடன் பரிமாறலாம். வெளிப்புறம் நன்றாக வெந்த பாட்டியும், கிரீமி பதத்தில் இருக்கும் பருப்பும் இணைந்து நிறைவான உணவாக இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு, குடும்ப விருந்து அல்லது விழாக்கால சமையலில் பாரம்பரிய ராஜஸ்தானிய சுவையை வீட்டிலேயே முயற்சிக்க விரும்புபவர்களுக்கு இந்த மூங் தால் பாட்டி ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
Also Read: வீட்டில் 150 சவரன் நகை மாயம்.. குழந்தையுடன் காணாமல் போன மனைவி கேரளாவில் கைது!



