ரேஷன் கடைகளுக்கு கோதுமை சென்று சேர்வதை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்க, இம்மாதம் 8,722 டன் கோதுமையை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதில், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் செய்த தாமதத்தால், 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில், கோதுமையை இலவசமாக வாங்கலாம்; இதை, மத்திய அரசு வழங்குகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வரை, 17,100 டன் கோதுமை வழங்கப்பட்ட நிலையில், மார்ச் முதல் 8,576 டன் கோதுமை ஒதுக்கப்படுகிறது. அதற்கு ஏற்ப, கார்டுதாரருக்கு தலா, 1 – 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கார்டுதாரர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, கடைகளுக்கு அனுப்ப வேண்டிய பொருட்களின் விபரத்தை, மாத இறுதியில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, உணவு வழங்கல் துறை தெரிவிக்கிறது. அதற்கு ஏற்ப, 36,000த்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும். இந்த பணியில் வாணிப கழகம் தாமதம் செய்வதால், கடைகளில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதன்படி, இம்மாதத்திற்கு 8,722 டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இரு வாரமாகியும் முழு அளவில் கோதுமை அனுப்பப்படவில்லை. இதனால், 12,753 கடைகளில் கோதுமை இல்லாததால், கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருகின்றன. இம்மாத்திற்கு 8,722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், அதை முறையாக ரேஷன் கடைகளுக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு விநியோகம் செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்ட போதே, இந்த அரசை எச்சரித்தும், மிகுந்த மெத்தனப் போக்குடன் தான் செயல்பட்டது. திமுக ஆட்சியில் மற்ற துறைகளைக் காட்டிலும், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது போலும்.
நெல் கொள்முதல் முதல், கோதுமை விநியோகம் வரை அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூட Total Failure ஆக இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.



