உத்தரப் பிரதேசத்தில், பெண் ஒருவர் தனது கணவரைக் கொலை செய்ய பாம்புகளை ஆயுதமாக பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண், தனது கணவர் இயற்கையான பாம்புக்கடியால் உயிரிழந்தது போல் சம்பவத்தை சித்தரிக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அதுல் குமார் பன்வார். இவர் ஹஸ்தினாபூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு தாமினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், தாமினிக்கும் அதே பள்ளியில் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த துஷார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இவர்களின் இந்த உறவுக்கு, தாமினியின் கணவர் அதுல் குமார் பன்வார் இடையூறாக இருந்துள்ளார். இதனால் தாமினி அவரது கணவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன் படி, அவர் சம்பவத்தன்று தூக்க மாத்திரையை பாலில் கலந்து அவரது கணவருக்கு கொடுத்துள்ளார். அதை அருந்திய அதுல் குமார் மயக்க நிலையில் இருந்தபோது, முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு கட்டுவிரியன் பாம்புகளை அவரது படுக்கையில் விட்டுள்ளார்.
இதனால் பாம்புகள் கடித்து, அதுல் குமார் உயிரிழந்துள்ளார். பாம்பு கடித்து கணவர் இறந்துவிட்டார் என்று நாடகமாடிய தாமினியை கண்காணித்த போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். அப்போது, இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போலீசாரின் தகவலின்படி, தாமினி தனது கள்ளக்காதலனிடம் ரூ.15 ஆயிரம் கொடுத்து இரண்டு கட்டுவிரியன் பாம்புகளை வாங்க ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும், அந்த பாம்புகளுக்கு மூன்று நாட்கள் உணவு வழங்காமல் வைத்திருந்ததாகவும், அவற்றை கணவர் தூங்கிக் கொண்டிருந்த படுக்கையில் விடப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், தாமினி, அவரது கள்ளக்காதலன் துஷார் மற்றும் பாம்புகளை வழங்கியதாகக் கூறப்படும் சோனு, உதய்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: “மாமா, நீ ரேப் பண்ணு… நான் வீடியோ எடுக்குறேன்.” நண்பர்களை நம்பிய ஜிம் உரிமையாளருக்கு நேர்ந்த சோகம்..



