இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Tata Consultancy Services (TCS) நிறுவனத்தின் மகாராஷ்டிர மாநில நாசிக் கிளையில் ஏற்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டு விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், நாசிக் காவல்துறை இதுவரை 9 FIR-களை பதிவு செய்து, பெண் மேலாளர் உட்பட 8 பேரை கைது செய்துள்ளது. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2025 ஜூன் மாதம் TCS நாசிக் கிளையில் ‘அசோசியேட்’ ஆக பணியில் சேர்ந்த புதுமணப் பெண், தனது மூன்று மாத பயிற்சி காலத்திலேயே பல்வேறு அவமதிப்புகளையும் பாலியல் தொந்தரவுகளையும் சந்தித்ததாக கூறியுள்ளார்.
‘பிளேயர்’, ‘ஜீரோ ஃபிகர்’ போன்ற அவமானகரமான பெயர்களால் அழைத்தல், திருமண வாழ்க்கை தனிப்பட்ட உறவுகள் குறித்து ஆபாசமான கேள்விகள், சக ஊழியர்கள் முன் அவமானப்படுத்தும் வகையில் பேசுதல், தேவையற்ற உடல் தொடுதல், அருகில் நெருங்குதல், சமூக வலைதளங்களில் தொந்தரவு செய்தல் உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார்.
மேலும், பயிற்சி காலத்தில் தொடர்பில்லாத ஒருவரே மீண்டும் மீண்டும் வந்து தனிப்பட்ட விஷயங்களை விசாரித்ததாகவும், திருமண வாழ்க்கையை குறித்துக் கேலி செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக, சேலை அணிந்திருந்த போது ஒருவர் முந்தானையை இழுத்ததாகவும், பணி செய்யும் போது தொடையில் கிள்ளுதல், கட்டிபிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் அந்த பெண் தெரிவித்தார். இவை அனைத்தும் தன்னை மனஅழுத்தத்திற்கும் பயத்திற்கும் உள்ளாக்கியதாக பெண் ஊழியர் கூறியுள்ளார்.
வேலையை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தால், ஆரம்பத்தில் எந்தப் புகாரும் அளிக்கவில்லை எனக் கூறிய அவர் துன்புறுத்தல் அதிகரித்ததையடுத்து காவல்துறையை அணுகியுள்ளார். இந்த வழக்கில், ஆறு பேருக்கும் மேற்பட்ட பெண்கள் இதேபோன்ற பாலியல் துன்புறுத்தல் மற்றும் மதமாற்ற அழுத்தம் குறித்து புகார் அளித்திருப்பது விசாரணைக்கு புதிய திருப்பமாக அமைந்துள்ளது.
இவ்வழக்கை வெளிச்சத்துக்கு கொண்டுவர காவல்துறை ரகசிய நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. பெண் காவலர்கள் துப்புரவுப் பணியாளர்களாக மாறுவேடத்தில் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து தகவல்கள் சேகரித்தனர். சில ஆண் காவலர்களும் மாறுவேடத்தில் பணியாற்றியதாக கூறப்படுகிறது.



