தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களைப் பெற அசல் ரேஷன் அட்டையை கையில் வைத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், கார்டின் மென்பொருள் நகல் (Soft copy) அல்லது அட்டை எண் இருந்தாலே போதுமானது என்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர், மாநிலம் முழுவதும் தற்போது 38,438 நியாயவிலைக் கடைகள் இயங்கி வருவதாக குறிப்பிட்டார். இதில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,495 கடைகளும், அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் பெருமளவிலான கடைகளும் பொதுமக்களுக்கு சேவையாற்றி வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து ரேஷன் விநியோக நடைமுறைகள் குறித்து பேசிய அவர், பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட கடைக்கு மட்டுமே சென்று பொருட்களை வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும், அருகிலுள்ள எந்தவொரு ரேஷன் கடையிலும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி பயன்பாட்டில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். அசல் ரேஷன் அட்டை இல்லாத சூழலிலும் மொபைல் போனில் உள்ள சாப்ட் காப்பி அல்லது ரேஷன் அட்டை எண்ணை காண்பித்து எளிதாகப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் என தெளிவுபடுத்தினார்.
பணி நிமித்தமாக வெளியூர் செல்பவர்களுக்கும், அடிக்கடி வாடகை வீடுகளை மாற்றுபவர்களுக்கும் இந்த நடைமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்ட அமைச்சர், தமிழகத்தில் உள்ள எந்த கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என்ற வசதி குறித்த போதிய விழிப்புணர்வு இன்னும் பலரிடம் இல்லாததால், இதனை பேரவையின் மூலம் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்தார்.
Read More : தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்ததா தவெக அரசு..? அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!!



