சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், பரிகார நிலையம் நடத்தி வந்த 50 வயது நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அவரது பரிகார நிலையம் மற்றும் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் லேப்டாப், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வெள்ளாளகுண்டம் பகுதியைச் சேர்ந்த விஜயராஜா, எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். அதே நேரத்தில் ‘சனீஸ்வரா’ என்ற பெயரில் பரிகார நிலையம் நடத்தி, மாந்திரீகம் மற்றும் பரிகார பூஜைகளை செய்து வந்தார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வசூல் பணிக்காக அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் விஜயராஜாவின் நிலையத்துக்குச் சென்றுள்ளார். அப்போது சிறுமியிடம் நெருக்கமாக பேசிய விஜயராஜா, அவரது கன்னத்தை கிள்ளி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சிறுமி புகார் அளித்துள்ளார்.
சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சிறுமி, நடந்ததை தனது தோழியிடம் தெரிவித்துள்ளார். அந்த தோழியும் விஜயராஜாவிடம் இதேபோன்ற சம்பவத்தை சந்தித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் விஜயராஜாவின் பரிகார நிலையத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், அதைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பள்ளி மாணவிகளின் சீருடைகள் இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அங்கிருந்த லேப்டாப்பை ஆய்வு செய்தபோது பெண்கள் மற்றும் சிறுமிகள் தொடர்பான ஆபாச காட்சிகள் இருந்ததாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் விஜயராஜாவின் எலக்ட்ரிக்கல்ஸ் கடையை சிலர் சேதப்படுத்தினர். பின்னர் விஜயராஜாவை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வாழப்பாடி போலீசார் விஜயராஜாவை கைது செய்து, அவரது வீடு மற்றும் பரிகார நிலையத்தில் இருந்து லேப்டாப், செல்போன் உள்ளிட்ட சாதனங்களை கைப்பற்றினர். தற்போது அந்த சாதனங்களில் உள்ள தரவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
விசாரணையில், விஜயராஜாவின் செல்போனில் பெண் ஒருவரின் ஆபாச வீடியோ இருந்ததும், அதைக் காட்டி பள்ளி மாணவிகளிடம் பணம் தருவதாக ஆசை காட்டி வீடியோ எடுக்க முயன்றதும் தெரியவந்துள்ளது. மேலும், குறிப்பிட்ட இணையதளத்துக்கு ஆபாச வீடியோ அனுப்பியதாக விஜயராஜா விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த இணையதளம், வீடியோ பரிமாற்றம் மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.
விஜயராஜாவின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் மேலும் எத்தனை பேரின் வீடியோக்கள் உள்ளன, அவை யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளன, அந்த பதிவுகளை பயன்படுத்தி யாரிடமாவது பணம் கேட்டு மிரட்டல் நடந்ததா என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சிறுமி அளித்த புகாரில் தொடங்கிய விசாரணை, தற்போது விஜயராஜாவின் மின்னணு சாதனங்களில் உள்ள பதிவுகள் மற்றும் அவற்றின் பரிமாற்றம் தொடர்பான பல்வேறு கோணங்களிலும் நடைபெற்று வருகிறது.
Also Read: நண்பனின் காதலியுடன் உல்லாசம்.. வீடியோவை பார்த்த நண்பர் கேட்ட காரியம்; இறுதியில் நடந்த கொடூரம்!



