ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தின் ஜமுவா சோக் பகுதியைச் சேர்ந்த 20 வயதான நீரஜ். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஊர்மிளா என்ற பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஊர்மிளாவுக்கும் அவரது சகோதரியின் கணவரான சுபாஷ் பஸ்வானுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், தனக்கு திருமணம் நடந்துவிட்டால் தனது அக்கா கணவருடன் உல்லாசமாக இருக்க முடியாது என்று ஊர்மிளா நினைத்துள்ளார். இதனால், கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து நீரஜை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். திட்டத்தின் ஒரு பகுதியாக, ஊர்மிளா தனது வருங்கால கணவரை பீகார் எல்லையோரத்தில் உள்ள பேலா வனப்பகுதிக்கு தனியாக வரும்படி பாசமாக அழைத்துள்ளார்.
இதனால் நீரஜ், ஊர்மிளா சொன்ன வனப்பகுதிக்கு ஆசையாக சென்றுள்ளார். ஆனால் அங்கு ஏற்கனவே காத்திருந்த ஊர்மிளாவும் சுபாஷ் பஸ்வானும் இணைந்து, நீரஜை கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் நீரஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர், நீரஜின் உடலை வனப்பகுதியில் விட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில், நீரஜ் காணாமல் போனதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், நீரஜை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மொபைல் போன் சிக்னல் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்தபோது, நீரஜின் கடைசி இருப்பிடம் பேலா வனப்பகுதி என்பது தெரியவந்தது. மேலும், சம்பவம் நடந்த இடத்தில் ஊர்மிளாவின் மொபைல் போனும் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், ஊர்மிளாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஊர்மிளா நடந்த அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, போலீசார் கள்ளக்காதலர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அக்கா கணவர் மீதுள்ள மோகத்தில், அப்பாவி இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: 6 மாதங்களில் 554 கணவர்கள் பலி.. வெளியான அதிர்ச்சி சர்வே!!



