லக்னோவில் ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்புக்கான உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற 25 வயது இளைஞர் ஓட்டப்பந்தயத்தின்போது உயிரிழந்த சம்பவம் தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரது தொண்டையில் 250 மில்லி அளவிலான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் சிக்கியிருந்ததும், அதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே மரணத்துக்குக் காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.
செப்டம்பர் 15ஆம் தேதி லக்னோவில் உள்ள 35வது பட்டாலியன் பிஏசி மைதானத்தில் ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்புக்கான உடற்தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிதாபூர் மாவட்டம் ராம்கோட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதியா ரஹீம்பூர் கிராமத்தைச் சேர்ந்த யோகேந்திர சிங் (25) ஓட்டப்பந்தயத்தின்போது உயிரிழந்தார்.
முதலில் ஆட்சேர்ப்பு தேர்வின்போது ஏற்பட்ட வழக்கமான சம்பவமாகவே யோகேந்திராவின் மரணம் கருதப்பட்டது. ஆனால், செப்டம்பர் 18ஆம் தேதி குடும்பத்தினரிடம் கிடைத்த பிரேதப் பரிசோதனை அறிக்கை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. அதில், யோகேந்திராவின் உடலில் 12 காயங்கள் இருந்ததுடன், அவரது தொண்டையில் 250 மில்லி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் சிக்கியிருந்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே மரணத்துக்குக் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து யோகேந்திராவின் குடும்பத்தினர் அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும், பிளாஸ்டிக் பாட்டில் வலுக்கட்டாயமாக வாயில் திணிக்கப்பட்டதால் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்தனர்.
யோகேந்திராவின் சகோதரர் கமல் கிஷோர், லக்னோவின் மகாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, அடையாளம் தெரியாத நபர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரினார். குடும்பத்தினர் எழுப்பிய சந்தேகங்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இந்த வழக்கை விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய லக்னோ டிசிபி விக்ராந்த் வீர் சிங் தெரிவித்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தொண்டையில் சிக்கியிருந்த 250 மில்லி தண்ணீர் பாட்டிலால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே மரணத்துக்குக் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த 35வது பட்டாலியன் பிஏசி வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அப்போது மைதானத்தில் இருந்த ஆட்சேர்ப்பு தேர்வர்கள் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கமல் கிஷோர் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது பிரேதப் பரிசோதனை அறிக்கை, சிசிடிவி பதிவுகள் மற்றும் சம்பவத்தின்போது மைதானத்தில் இருந்த தேர்வர்கள், பணியாளர்கள் தொடர்பான தகவல்களை போலீசார் சேகரித்து விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
Also Read: மழைக்கால சரும பராமரிப்பு.. மறக்காமல் பயன்படுத்த வேண்டிய 5 இயற்கை இலைகள்!



