இந்தியாவின் கலாசாரம், ஆன்மிக நம்பிக்கைகள் மற்றும் கலை வடிவங்கள் உலக நாடுகளிலும் கவனம் பெற்று வருவதற்கு தாய்லாந்தைச் சேர்ந்த கணேச பக்தர் பந்தூன் திர்கானோனின் பயணம் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் 138-வது அத்தியாயத்தில் பேசிய பிரதமர் மோடி, அண்மையில் நாடு முழுவதும் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை நினைவுகூர்ந்தார். விநாயகர் வழிபாடு இந்தியாவைத் தாண்டியும் பல்வேறு நாடுகளில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
தாய்லாந்தில் விநாயகர் ‘ப்ரா பிகானெட்’ என்ற பெயரில் வழிபடப்படுகிறார். அந்நாட்டைச் சேர்ந்த பந்தூன் திர்கானோனுக்கு 19 வயதாக இருந்தபோது அவரது தந்தை விநாயகர் படத்தை பரிசாக வழங்கியுள்ளார். அதன்பிறகு விநாயகர் தொடர்பான பாரம்பரியங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வந்த அவர், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் கூறினார்.
இந்தியாவுடன் மட்டுமின்றி நேபாளம் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளுக்கும் அவர் பயணம் செய்துள்ளார். மகாராஷ்டிராவின் விநாயகர் வழிபாட்டு மரபுகள் மீது தனிப்பட்ட ஆர்வம் கொண்ட அவர், அங்கு பலமுறை சென்று அஷ்டவிநாயகர் தலங்களைப் பார்வையிட்டுள்ளார். அதன் மூலம் தாய்லாந்திலும் அஷ்டவிநாயகர் யாத்திரை குறித்த ஆர்வம் அதிகரித்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, கடந்த 2002-ம் ஆண்டு வடக்கு தாய்லாந்தின் சியாங் மாய் நகரில் ‘கணேச இமயமலை அருங்காட்சியகம்’ என்ற அருங்காட்சியகத்தை பந்தூன் திர்கானோன் நிறுவியுள்ளார். பிரதமர் மோடியின் தகவலின்படி, அங்கு தற்போது 10,000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தில் இந்தியா செல்ல முடியாத பக்தர்களுக்காக அஷ்டவிநாயகர் மரபைச் சேர்ந்த சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணியளவில் விநாயகருக்கு வழிபாடு நடைபெறுவதுடன், விநாயகருடன் தொடர்புடைய முக்கிய நாட்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்தியாவின் நம்பிக்கை, கலை மற்றும் கலாசார மரபுகள் வெளிநாடுகளிலும் பரவி வருவதற்கு பந்தூன் திர்கானோனின் பங்களிப்பு ஒரு உதாரணமாக இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். கணேச பக்தி மற்றும் இந்திய கலாசாரத்துடன் தொடர்புடைய இந்தப் பயணம், இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான கலாசார தொடர்பையும் வெளிப்படுத்துகிறது.
Also Read: செப்டம்பர் 28 முதல் 3 நாள் வங்கி வேலைநிறுத்தம்.. எந்த சேவைகள் பாதிக்கப்படும்?



