இந்தியாவில் வயதானோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், டிமென்ஷியா (ஞாபக மறதி நோய்) தடுப்பு, ஆரம்பகட்ட கண்டறிதல் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான ஆதரவு ஆகியவற்றை பொது சுகாதாரத் திட்டங்களில் முக்கிய பகுதியாக இணைக்க வேண்டும் என மருத்துவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘Hope for Dementia Conclave 2026’ நிகழ்ச்சியில் இதுகுறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. டிமென்ஷியாவுடன் வாழும் நபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ‘Hope Ek ASHA’ அமைப்பு இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. நரம்பியல், மனநல மருத்துவம், முதியோர் மருத்துவம், பராமரிப்பாளர் பயிற்சி மற்றும் டிமென்ஷியா சேவைகள் தொடர்பான நிபுணர்கள் இதில் பங்கேற்றனர்.
2023-ல் Alzheimer’s & Dementia இதழில் வெளியான தேசிய அளவிலான LASI-DAD ஆய்வின்படி, இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 7.4 சதவீதம் பேர், அதாவது சுமார் 88 லட்சம் பேர், டிமென்ஷியாவுடன் வாழ்ந்து வந்தனர். மக்கள்தொகை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, பாதிப்பு விகிதம் மாறாமல் இருந்தால் 2036-ல் இந்த எண்ணிக்கை 1.69 கோடியாக அதிகரிக்கலாம் என ஆய்வு மதிப்பிட்டுள்ளது.
மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டாக்டர் வி.கே. பால், டிமென்ஷியாவை ஒரு முக்கிய பொது சுகாதார சவாலாக அணுக வேண்டும் என்றார். அதே நேரத்தில், சிகிச்சை மற்றும் பராமரிப்பின் மையத்தில் நோயாளியின் கண்ணியம், மனிதநேயம் மற்றும் அக்கறை இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
டிமென்ஷியாவை முழுமையாகத் தடுக்க முடியாவிட்டாலும், சில ஆபத்து காரணிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் அதன் பாதிப்பை குறைக்கவும், நோய் ஏற்படுவதை தாமதப்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், நாடு முழுவதும் செயல்படும் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் மூலம் டிமென்ஷியா குறித்த விழிப்புணர்வு, ஆபத்து காரணிகளை குறைக்கும் நடவடிக்கைகள் மற்றும் ஆரம்பகட்ட அறிகுறிகளை கண்டறிதல் போன்றவற்றை மக்களுக்கு அருகிலேயே கொண்டு செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘Hope Ek ASHA’ அமைப்பின் நிறுவனர் தலைவர் டாக்டர் சுஷ்மா சாவ்லா, தனது தாயார் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டபோது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் இந்த அமைப்பை தொடங்கியதாக கூறினார். பின்னர் இந்த முயற்சி, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆலோசனை, நினைவாற்றல் மதிப்பீடு, பயிற்சி, சமூக சேவை, பகல் நேர பராமரிப்பு மற்றும் தங்குமிட பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் அமைப்பாக வளர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
டிமென்ஷியா பராமரிப்பு என்பது ஒரு மருத்துவர் அல்லது ஒரு குடும்பத்தின் பொறுப்பு மட்டுமல்ல என்றும், சமூகத்தின் ஒட்டுமொத்த பங்களிப்பு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். டிமென்ஷியாவுடன் வாழும் நபர்களுக்கு கண்ணியமான வாழ்க்கை, பராமரிப்பாளர்களுக்கு தேவையான ஆதரவு மற்றும் அனைவருக்கும் தரமான பராமரிப்பு கிடைக்கும் சூழலை உருவாக்குவதே நோக்கம் என்றும் அவர் கூறினார்.
BLK-Max Super Speciality Hospital-ன் நரம்பியல் துறை தலைவர் டாக்டர் அதுல் பிரசாத், இந்தியாவின் அணுகுமுறை நோய் தீவிரமடைந்த பிறகு சிகிச்சை அளிப்பதில் மட்டும் இருக்கக் கூடாது என்றார். மூளை ஆரோக்கியம், டிமென்ஷியா தடுப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை இணைத்தே நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாநாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் டிமென்ஷியா தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு கூடுதல் நிதி, சுகாதார சேவைகளுடன் மனநல சேவைகளை ஒருங்கிணைத்தல், பல்துறை நினைவாற்றல் கிளினிக்குகள், பராமரிப்பாளர்களுக்கான முறையான பயிற்சி, காப்பீட்டு வசதிகள், கிராமப்புறங்களில் சமூக அடிப்படையிலான சேவைகள் மற்றும் குடும்பங்களுக்கு இடைநிலை ஓய்வு பராமரிப்பு போன்றவை குறித்தும் பேசப்பட்டது.
டிமென்ஷியா ஒருவரை மட்டுமே பாதிக்கும் உடல்நலப் பிரச்சினை அல்ல; அது முழு குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையையும் மாற்றக்கூடியது என்பதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். நோயாளியின் விருப்பம், கண்ணியம் மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பராமரிப்பு வழங்குவதுடன், தேவைக்கேற்ப பகல் நேர பராமரிப்பு, வீட்டிலேயே உதவி அல்லது தங்குமிட பராமரிப்பு போன்ற வசதிகளும் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
டிமென்ஷியாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை சிகிச்சையில் மட்டும் நின்றுவிடாமல், தடுப்பு, ஆரோக்கியமான முதுமை, ஆரம்பகட்ட கண்டறிதல், வீட்டுமுறை மற்றும் சமூக அடிப்படையிலான பராமரிப்பு, எளிதில் அணுகக்கூடிய சுகாதார சேவைகள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான ஆதரவு என அனைத்தையும் ஒருங்கிணைத்ததாக இருக்க வேண்டும் என்பதே மாநாட்டின் முக்கிய கருத்தாக அமைந்தது.
Also Read: தாய்லாந்தில் 10,000 விநாயகர் சிலைகள்.. 40 ஆண்டுகால பக்தி குறித்து மோடி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!


