பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தனியார் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 29 சிறுவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மாணவர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத் தலைநகரான பெஷாவரில் உள்ள திர் காலனி பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வியாழக்கிழமை பள்ளியில் மாணவர்கள் இருந்தபோது கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் 13 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடைய குழந்தைகள் பலர் சிக்கிக்கொண்டனர்.
விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியரின் உடல்கள் மீட்கப்பட்டு, லேடி ரீடிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. காயமடைந்தவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
மீட்புப் படையினர் இடிபாடுகளை அகற்றி, அவற்றுக்குள் சிக்கியிருக்கக்கூடிய மாணவர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்களைத் தேடி வருகின்றனர். காயமடைந்த 25 குழந்தைகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமா என்ற அச்சமும் நிலவுகிறது.
பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தத் துயரச் சம்பவத்துக்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்த அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிறந்த மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Also Read: படகில் இருந்த சிறிய துளை.. நடு ஆற்றில் நடந்த கோர விபத்து! 13 குழந்தைகள் பலி..



