தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய், ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே முக்கியமான அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற முக்கிய பொதுமக்கள் கூடும் இடங்களிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட உத்தரவிட்டார்.
எந்தெந்த கடைகள் மூடப்படுகின்றன? அரசுத் தரவுகளின்படி, தற்போது தமிழ்நாட்டில் 4,765-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் புதிய கொள்கையின் அடிப்படையில் 717 கடைகள் மூடப்பட உள்ளன.
அதில் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள 276 கடைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்களுக்கு அருகிலுள்ள 255 கடைகள் அடங்கும். இளைஞர்களை மதுபழக்கத்திலிருந்து பாதுகாக்கவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை அவசியம் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் மூலம் தமிழகத்திற்கு வரும் வருமானம் எவ்வளவு? தமிழ்நாடு, இந்தியாவில் மிகப்பெரிய மதுபான சந்தைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மாநில அரசின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. அரசு ஆவணங்களின்படி:
2021-22 ஆம் ஆண்டு டாஸ்மாக் வருவாய் சுமார் ரூ. 36,000 கோடி
2022-23 ஆம் ஆண்டு ரூ. 44,000 கோடிக்கு மேல்
2023-24 ஆம் ஆண்டு ரூ.45,855 கோடி
2024-25 நிதியாண்டில் எதிர்பார்க்கப்படும் வருவாய் ரூ. 48,344 கோடி
இதில் ரூ. 37,324 கோடி மதிப்புக்கூட்டு வரி (VAT) மூலமும், ரூ.11,020 கோடி கலால் வரி மூலமும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுமா? மூடப்பட உள்ள 717 கடைகள், மாநிலத்தின் மொத்த டாஸ்மாக் கடைகளில் சுமார் 15 சதவீதம் ஆகும். இதனால், தமிழக அரசின் மதுபான வருவாயில் கணிசமான பாதிப்பு ஏற்படக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த நடவடிக்கையால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
Read more: இவற்றை நீங்கள் மைக்ரோவேவில் சூடுபடுத்துகிறீர்களா..? உடனே நிறுத்துங்கள்..! இல்லன்னா சிக்கல்..!



