அரசு கலைக்கல்லூரியில் உதவிப் பேராசிரியர்களுக்கு பணிநிலைப்பு சான்றிதழ்கள் வழங்கவில்லை என ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில்; தமிழக அரசு கல்லூரிகளில் 7 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த 1,000-க்கும் கூடுதலான உதவிப் பேராசிரியர்களுக்கு, ஓராண்டில் வழங்கப்பட வேண்டிய பணி நிலைப்பு ஆணை, இன்று வரை வழங்கப்படவில்லை. கல்லூரிக்கல்வி இயக்குநரகத்தின் அலட்சியத்தால் உதவிப்பேராசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் பணி நிலை உயர்வு மறுக்கப்பட்டு வருவது நியாயப்படுத்த முடியாத அநீதி ஆகும். தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான கலை மற்றும் கல்லூரிகளுக்கு 1,093 உதவிப்பேராசிரியர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர். உதவிப் பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்த நாளில் இருந்து ஓராண்டு தகுதி காண் பருவமாக கருதப்படும்.
இந்தக் காலத்தில் அவர்களின் கல்விச்சான்றிதழ் சரிபார்ப்பு, கடந்த கால நடத்தைகள், பணித்திறமை ஆகியவை ஆய்வு செய்யப்படும். ஓராண்டு தகுதிகாண் பருவம் முடிவடைந்தவுடன், அவர்களுக்கு பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்படும். இந்த நடைமுறைப்படி 2016ஆம் ஆண்டு ஜூலையில் அவர்களுக்கு பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், மொத்தம் 7 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் கூட, 1093 உதவிப் பேராசிரியர்களுக்கும் பணிநிலைப்புச்சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.
கல்லூரி உதவிப்பேராசிரியர்களுக்கு பணி நிலைப்புச்சான்றிதழ் வழங்கப்படாதது அத்துடன் முடிந்து விடும் பிரச்னை இல்லை. பணி நிலைப்புச்சான்றிதழ் வழங்கப்படாததால், அதனடிப்படையில் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த உரிமையும் இன்று வரை வழங்கப்படவில்லை. வழக்கமான தகுதிகளுடன் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேருபவர்களுக்கு 5-வது ஆண்டில் முதலாவது பணிநிலை மற்றும் ரூ.1000 தர ஊதிய உயர்வு வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 2ஆவது பணி நிலை உயர்வு மற்றும் ஊதிய உயர்வும், அடுத்த 3 ஆண்டுகளில், அதாவது 13-வது ஆண்டில் இணைப் பேராசிரியர் பதவி உயர்வும் வழங்கப்படும். இன்னும் பணி நிலைப்புச் சான்றிதழே வழங்கப்படாததால் இரு ஆண்டுகளுக்கு முன் கிடைத்திருக்க வேண்டிய பணிநிலை உயர்வு மற்றும் தர ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. இதை உடனடியாக செயல்படுத்துமாறு தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார்.