சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போது புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. தற்போதைய நிலவரங்களின்படி, தலைநகர் சென்னையின் பல தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் மட்டுமின்றி திமுக அமைச்சர்கள் போட்டியிடும் பல தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி தவெக 91 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 67 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திமுக 55 தொகுதிகளில் முன்னிலைபெற்று மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. இதற்கிடையே சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜய் இல்லத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
தகவலின்படி, விஜய் இல்லத்தின் முன்பகுதியில் ஒரு துணை ஆணையர் தலைமையில், ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் CRPF வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், விஜய் இல்லத்துக்கு அருகிலுள்ள கபாலீஸ்வரர் கோயில் நுழைவாயில் பகுதியிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் கூடாமல் இருக்கவும், கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும் இந்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய வழித்தடங்களில் போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்.



