மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் சூழல் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வீட்டிலிருந்து பணிபுரியும் (Work From Home – WFH) நடைமுறையை மீண்டும் பின்பற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட பல மாநில அரசுகள் வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.
நாட்டிற்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி, அதிகரித்து வரும் உலகளாவிய எரிசக்தி விலைகள் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பிலும் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார். இதனால் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, முடிந்தவரை வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறையை கடைப்பிடிக்குமாறு பொதுமக்களிடம் அவர் வலியுறுத்தினார்.
டெல்லி: இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டெல்லி அரசு உடனடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அலுவலக கூட்டங்களில் 50 சதவீதம் ஆன்லைன் மூலம் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற அலுவல் பயணங்களை குறைத்து எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா: அதேபோல், மகாராஷ்டிர அரசும் எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. பல துறைசார் கூட்டங்கள் ஏற்கனவே இணையவழியில் நடத்தப்பட்டு வருவதாக அந்த மாநில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்குப் பதிலாக மின்சார வாகனங்களை அதிகம் பயன்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம்: உத்தரப் பிரதேசத்திலும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பல துறைகளின் உள்ளகக் கூட்டங்களை காணொளி வாயிலாக நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார். அதோடு, முடிந்தவரை வாரத்திற்கு குறைந்தது இரண்டு நாட்களாவது ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேற்கு வங்காளம்: மேற்கு வங்காளத்திலும், எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநில ஆளுநர் ஆர்.என். ரவி, நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகள் அதிக அளவில் ஆன்லைன் கூட்டங்கள் மற்றும் வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேற்கு ஆசியாவில் தொடரும் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாகவே Work From Home கலாச்சாரம் மீண்டும் முக்கியத்துவம் பெற தொடங்கியுள்ளது.
Read more: உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? உடலில் இந்த ஊட்டச்சத்து குறைபாடு இருக்கலாம்! கவனமாக இருங்க..!



