பப்பாளி பொதுவாக உடல் நலத்திற்கு மிகவும் நல்ல பழமாகக் கருதப்படுகிறது. செரிமானத்தை மேம்படுத்தவும், வயிற்றுப் பிரச்சனைகளை குறைக்கவும் இது பரவலாக பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், சில உடல்நிலை கொண்டவர்கள் பப்பாளியை சாப்பிடுவது தீங்கு விளைவிக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். யாரெல்லாம் பப்பாளி சாப்பிடக் கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
குறைந்த இரத்த சர்க்கரை உள்ளவர்கள்: பப்பாளி இரத்தச் சர்க்கரை அளவை குறைக்க உதவக்கூடியது என்பதால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், ஏற்கனவே குறைந்த இரத்தச் சர்க்கரை (Low Blood Sugar) உள்ளவர்கள் இதை அதிகமாக சாப்பிட்டால் பிரச்சனைகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது. சில நேரங்களில் இதயத் துடிப்பு அதிகரிக்கும் அபாயமும் இருப்பதாகவும் மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள்: சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் பப்பாளி சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். சில சூழ்நிலைகளில் இது கற்களின் அளவை அதிகரிக்கக்கூடும் என்பதால், மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வாமை: மேலும், சிலருக்கு பப்பாளி ஒவ்வாமை (allergy) ஏற்பட வாய்ப்பு உள்ளது. பப்பாளியில் உள்ள சில நொதிகள் காரணமாக சுவாச சிரமம், இருமல், தோல் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இதுபோன்ற ஒவ்வாமை உள்ளவர்கள் பப்பாளியை தவிர்ப்பது பாதுகாப்பானது.
கர்ப்பிணி பெண்கள்: கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி சாப்பிடுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனவும் மருத்துவ ஆலோசனைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பச்சை பப்பாளியில் உள்ள சில பொருட்கள் கர்ப்பகால சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மருத்துவர் பரிந்துரையின்றி இதை எடுத்துக்கொள்ளக் கூடாது என எச்சரிக்கப்படுகிறது.



