சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பிராந்தியத்தில் உள்ள லியுஷோ அருகே திங்கட்கிழமை அதிகாலை 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அதிர்ச்சியால் சுமார் பன்னிரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் அதிகாலை 12:21 மணியளவில் லியுஜோ நகரின் லியுனான் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) மற்றும் சீன நில அதிர்வு நிர்வாகம் தெரிவித்துள்ளன. நிலநடுக்கம் சுமார் 8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதால், மேற்பரப்பில் அதிக சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் உள்ளே இருந்தவர்கள் சிக்கியதாகவும், சிலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மூன்று பேர் காணாமல் போயுள்ளதாகவும், நான்கு பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படைகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. அதிகாலை 2 மணிக்குள் 51 மீட்பு வாகனங்கள் மற்றும் 315 பணியாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அரசு தரப்பில் அவசரகால நடவடிக்கைகள் விரைவாக செயல்படுத்தப்பட்டுள்ளன. குவாங்சி பிராந்திய நிலநடுக்க நிவாரண தலைமையகம் மூன்றாம் நிலை அவசரகால அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து சீன நிலநடுக்க நிர்வாகமும் அவசர நடவடிக்கைகளை தொடங்கியது.
மேலும், அவசரகால மேலாண்மை அமைச்சகம் மற்றும் அரச மன்றத்தின் நிலநடுக்க நிவாரண குழு பாதிக்கப்பட்ட பகுதிக்கு சிறப்பு பணிக்குழுவை அனுப்பியுள்ளது. மீட்பு பணிகளை தீவிரப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக வெளியேற்றவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
குவாங்சி பகுதி பொதுவாக சீனாவின் அதிக நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாக இல்லை. ஆனால் இந்த திடீர் நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தற்போது மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காணாமல் போனவர்களை கண்டறியும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



