மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தெற்கு ஈரானில் உள்ள சில இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் “தற்காப்புத் தாக்குதல்கள்” நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ஈரானியப் படைகள் ஹோர்முஸ் ஜலசந்தியில் கடற்படைக் கண்ணிவெடிகளை புதைக்க முயன்றதாகவும், அமெரிக்கப் போர் விமானங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த ஏவுகணைத் தளங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை முழுக்க தற்காப்பு நோக்கத்தில்தான் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய இரண்டு படகுகள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பந்தர் அப்பாஸ் பகுதியில் இருந்த தரை-வான் ஏவுகணைத் தளமும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, பந்தர் அப்பாஸ் மற்றும் ஓமான் வளைகுடாவை ஒட்டியுள்ள சிரிக், ஜாஸ்க் போன்ற கடலோர நகரங்களில் தொடர்ந்து வெடிச்சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில நிமிட இடைவெளியில் பல முறை வெடிப்பு சத்தங்கள் கேட்டதால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த வெடிப்புகள் குறித்து ஈரான் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதே நேரத்தில், இது பெரிய போராக மாறுமா என்ற அச்சமும் உலக நாடுகள் மத்தியில் உருவாகியுள்ளது. இதற்கிடையில், கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
பதற்றத்தை குறைப்பது, பொருளாதார தடைகளை தளர்த்துவது மற்றும் முடக்கப்பட்ட நிதிகளை விடுவிப்பது போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் முக்கிய எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக இருக்கும் ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றம் அதிகரித்திருப்பதால், உலகளாவிய எண்ணெய் சந்தைகளிலும் அதிர்வு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.



