குழந்தைகளை வளர்ப்பது என்பது அவர்களுக்கு உணவு, கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றை மட்டும் கற்றுக் கொடுப்பது அல்ல. எந்த சூழ்நிலையிலும் தங்களுக்கு நேரும் பிரச்சினைகள், அச்சம் அல்லது துன்புறுத்தல்கள் குறித்து தயக்கமின்றி பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கையையும் அவர்களிடம் உருவாக்க வேண்டும். குழந்தைகள் மனம் திறந்து பேசும் சூழலை பெற்றோர் ஏற்படுத்தினால், பல துயர சம்பவங்களை ஆரம்பத்திலேயே தடுக்க முடியும்.
ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர், தனக்கு நேர்ந்த கொடுமைகளை பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்ததால், அந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் 15 வயதான மீனு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அருகில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் இவருக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக சிறுமியை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி நிறைமாத கர்ப்பிணி என்றும் அவர் பிரசவ வலியால் துடிப்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது சிறுமிக்கு அழகான குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்நிலையில், மருத்துவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்து வந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் தனியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமி, பலரும் தன்னை பலாத்காரம் செய்ததால் தான் கர்ப்பமடைந்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளின் புகாரின் பேரில், மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை கையில் எடுத்தனர்.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, போலீசார் சிறுமியின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, அந்த சிறுமியை பல கொடூரர்கள் கூட்டு பலாத்காரம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட முத்தழகுபட்டியை சேர்ந்த 45 வயதான வேளாங்கண்ணி, கிழக்கு ரத வீதியை சேர்ந்த 55 வயதான கிருஷ்ணமூர்த்தி உட்பட கூலி தொழிலாளர்கள் 7 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிறுமிக்கு பிறந்த குழந்தை, திருப்பூர் பாதுகாப்பு மையத்தில் பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி திண்டுக்கல் குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: கல்லூரி முதல்வரின் “பிறப்புறுப்பை” கடித்த மாணவர்.. பாலியல் வன்கொடுமை முயற்சியால் பரபரப்பு!



