சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மீது தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரது வேட்புமனுவில், திமுக அறக்கட்டளை மற்றும் சொத்து விபரங்களை மறைத்ததாக வழக்கறிஞர் திருஞானசம்பந்தன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தேர்தல் விதிகள் படி, வேட்பாளர்கள் தங்களின் சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் அறக்கட்டளை தொடர்புகளை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும். ஆனால், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின், திமுக அறக்கட்டளை பற்றிய தகவல்களை வேட்புமனுவில் மறைத்துவிட்டதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, 2018ல் ஸ்டாலின் இந்த அறக்கட்டளையின் தலைவராகப் பொறுப்பேற்றார். இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டம் கடம்பாடி கிராமத்தில் ரூ.2.27 கோடி மதிப்பிலான சொத்துக்கள் வாங்கப்பட்டது. அந்த விவரங்களை வேட்புமனுவில் அவர் குறிப்பிடவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தவறான தகவல்களை தந்ததற்காக, தேர்தல் ஆணையம் இது குறித்து விசாரணை நடத்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தர்மாதிகாரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதாடினார். தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் தனது சொந்த சொத்துக்கள், கடன்கள் மற்றும் தனிப்பட்ட நிதி விவரங்களை மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும். ஒரு அறக்கட்டளையின் நிர்வாகி என்ற முறையில், அந்த அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்து விவரங்களை வேட்புமனுவில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறினார்.
இதையடுத்து வழக்கு ஆவணங்களின் முறையான ஆங்கில மொழிபெயர்ப்பை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். போதிய ஆவணங்கள் மற்றும் தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் நோட்டீஸ் அனுப்ப முடியாது என கூறினர். வேட்புமனு மற்றும் வழக்கு ஆவணங்களை சரியாக மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து, வழக்கை ஜூலை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Read More : வினாத்தாள் லீக் ஆனா 10 வருஷம் ஜெயில்.. ரூ.10 கோடி அபராதம்..!! மத்திய அரசின் அதிரடி சட்டம்..!!


