நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தை தொடர்ந்து பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி ஆற்றில் உருவான கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. ஆற்றின் கரையோரத்தில் இருந்த குடியிருப்புகள், பாலங்கள் மற்றும் வாகனங்கள் கண் இமைக்கும் நேரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். இதில் மாயமானவர்களில் சுமார் 300 பேர் இந்தியர்கள் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கனால் தெரிவித்துள்ளதால் பெரும் சோகம் நிலவுகிறது.
இந்நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைப் பத்திரமாக மீட்கும் பணிகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் விஜய், களத்தில் பணிகளைக் கண்காணிக்க ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். தலைமையிலான சிறப்புக் குழுவை உடனடியாக காத்மாண்டுவுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மத்திய அமைச்சகங்களுடன் இணைந்து துரிதமாக ஒருங்கிணைப்பதற்காக தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகியோர் உடனடியாக டெல்லிக்கு செல்லவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.



