ஒரு பேரழிவு வெள்ளம் தாக்கியபோது, சுற்றியிருந்த வீடுகள், வாகனங்கள், பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால், அவற்றுக்கு நடுவே பச்சை நிறத்தில் இருந்த 4 மாடி வீடு மட்டும் அசைக்க முடியாதபடி காட்சியளித்தது. வெள்ளத்தின் வேகத்துக்கு மத்தியிலும் அந்தக் கட்டிடம் எப்படி தப்பியது என்ற கேள்விக்கு, அதன் 40 ஆண்டு பழமையான கட்டுமானமே பதிலாக அமைந்துள்ளது.
நேபாளத்தின் போடோ கோஷி ஆற்றில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட கடும் வெள்ளம், ஆற்றங்கரையோர பகுதிகளை முற்றிலும் புரட்டிப் போட்டது. திடீரென அதிகரித்த நீரின் வேகத்தை சமாளிக்க முடியாமல் பல கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், ஏராளமான வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த பேரழிவில் சிக்கிய அந்தப் பச்சை நிற வீட்டைச் சுற்றிலும் வெள்ளநீர் பலத்த வேகத்தில் பாய்ந்தது. கீழ்ப்பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கியபோதும், வீட்டின் முக்கிய கட்டமைப்பு மட்டும் நிலை குலையவில்லை. இதனால் அந்த வீட்டின் கட்டுமானம் குறித்த தகவல்கள் பலரது கவனத்தையும் பெற்றன.
வீட்டின் உரிமையாளர் பிரகாஷ் கூறிய தகவலின்படி, அந்தக் கட்டிடம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆற்றுக்கு அருகில் வீடு கட்டப்பட்டதால், அஸ்திவாரத்தை வழக்கத்தைவிட வலுவாக அமைக்க அப்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது. அடித்தளப் பகுதியில் சாலை அமைக்கப் பயன்படுத்தப்படும் வலுவான கட்டுமானப் பொருட்களை பல அடுக்குகளாகப் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் பலனாக, வெள்ளத்தின் தாக்கம் வீட்டின் கீழ்ப்பகுதியை கடுமையாக பாதித்தாலும், முழுக் கட்டிடமும் சரிந்து விழாமல் தப்பியுள்ளது.
வெள்ளம் வருவதற்கான எச்சரிக்கை கிடைத்த நேரத்தில் பிரகாஷ் வீட்டில் இல்லை. அருகிலிருந்த கடையில் இருந்த அவருக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அங்கு இருந்த குடும்பத்தினரை பாதுகாப்பாக மேலே அழைத்துச் சென்றுள்ளார்.
நிலைமை மோசமடைந்ததால் குடும்பத்தினர் வீட்டின் மேல்மாடிக்குச் சென்றுள்ளனர். ஆனால், வெள்ளநீர் 4-வது மாடி வரையிலும் உயர்ந்ததால், இறுதியில் மாடியில் இருந்த உயரமான பகுதியில் ஏறி உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். வீட்டில் இருந்த 5 பேரும் நீண்ட நேரம் அச்சத்துடன் அங்கேயே காத்திருந்தனர்.
வெள்ளம் வடியும் வரை சுமார் ஒன்றரை மணி நேரம் அவர்கள் அந்த ஆபத்தான சூழ்நிலையில் சிக்கியிருந்தனர். பின்னர் அருகிலுள்ள டோல் பகுதியில் இருந்தவர்கள் வந்து குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர்.
வீடு இடிந்து விழாததால் குடும்பத்தினர் உயிர் தப்பினாலும், வெள்ளம் ஏற்படுத்திய சேதம் மிகப்பெரியது. கீழ்ப்பகுதியில் இருந்த குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இரண்டு வாகனங்களும் தண்ணீரில் சிக்கி காணாமல் போயின.
பேரழிவுக்குப் பிறகு எடுக்கப்பட்ட காட்சிகளில், சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் உருக்குலைந்த நிலையில், அந்தப் பச்சை நிற வீடு மட்டும் நிலைத்து நிற்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட வலுவான அஸ்திவாரம், அந்தக் குடும்பத்திற்கு இந்த பேரிடர் நேரத்தில் மிகப்பெரிய பாதுகாப்பாக அமைந்துள்ளது.
Also Read: நேபாள பேரிடர்: 163 இந்தியர்கள் மீட்பு… சுரங்கங்களில் தொடரும் மீட்புப் பணி; பலி எண்ணிக்கை 1,050 ஆக உயர்வு!



