12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவருடன் படித்த 4 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவியை தொடர்ந்து அவமானப்படுத்தியதாகவும், கேலி கிண்டல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த இந்தச் சம்பவம் மாணவியின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளியில் படித்து வந்த அந்த மாணவியை சில சக மாணவர்கள் தொடர்ந்து குறிவைத்து பேசியதாக குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
வகுப்பறை மட்டுமின்றி பள்ளி வளாகத்திலும் அவரை கேலி செய்ததாகவும், அவமானப்படுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மாணவிக்கு கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன்பாகவே மாணவி மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும், பள்ளியில் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து குடும்பத்தினரிடம் வேதனையை வெளிப்படுத்தியதாகவும் விசாரணையில் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்துக்கான காரணத்தை அறிய குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் பள்ளியில் மாணவியை குறிவைத்து தொடர்ந்து கேலி, கிண்டல் மற்றும் அவமானப்படுத்தும் செயல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் மாணவியுடன் படித்த 4 பேர் மீது போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
தற்போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிக்கு ஏற்பட்ட மன அழுத்தத்துக்கும் பள்ளியில் நடந்த சம்பவங்களுக்கும் நேரடி தொடர்பு இருந்ததா என்பதையும் விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் பள்ளிகளில் மாணவர்களுக்கு இடையிலான bullying-ஐ சாதாரண கேலி கிண்டலாக கடந்து செல்லக்கூடாது என்ற விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. ஒரு மாணவரை தொடர்ந்து அவமானப்படுத்தும் செயல்கள் அவரது மனநிலையை எந்த அளவுக்கு பாதிக்கின்றன என்பதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவனிக்க வேண்டிய அவசியத்தையும் இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
Also Read: லண்டன் பயணத்தின் பின்னணியில் அஜித் ரேசிங் டீமா?.. மாரிதாஸ் பதிவால் வெடித்த புதிய விவாதம்!



