சமீபத்தில் முடிவடைந்த 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் வழக்கம் போல் சீனா 169 தங்கம் உட்பட 341 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்து தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இருப்பினும், வெளிப்பார்வைக்கு சீனா முதலிடத்தில் இருந்தாலும், அதன் பதக்கப் பட்டியலில் விழுந்துள்ள சறுக்கல்கள் விளையாட்டு உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
கடந்த 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனா 201 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 383 பதக்கங்களைக் குவித்திருந்தது. ஆனால், இந்த 2026 பதிப்பில் சீனாவின் மொத்த பதக்கங்கள் 42 குறைந்துள்ளதுடன், அதில் 32 தங்கப் பதக்கங்கள் கைநழுவிப் போயுள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சொந்த மண்ணில் ஆடிய முந்தைய போட்டிகளுடன் ஒப்பிடும்போது, 32 தங்கப் பதக்கங்களை இழந்துள்ளதைச் சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது.
சீனாவிற்கு என்ன நேர்ந்தது?
டேபிள் டென்னிஸில் 36 ஆண்டுகால சாதனை தகர்ந்தது: சீனா பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த டேபிள் டென்னிஸ் ஆடவர் அணி பிரிவில், இறுதிப்போட்டியில் ஜப்பானிடம் தோல்வியடைந்து தங்கப் பதக்கத்தை இழந்தது. இதன் மூலம் கடந்த 36 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த பிரிவில் சீனா தங்கம் வெல்ல தவறவிட்டுள்ளது.
பேட்மிண்டனில் 52 ஆண்டுகால சரிவு: ஆசிய விளையாட்டு வரலாற்றில் கடந்த 52 ஆண்டுகளில் இல்லாத அளவாக, ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் சீனா ஒரு பதக்கம் கூட வெல்ல முடியாமல் வெளியேறியுள்ளது. பேட்மிண்டனில் 2 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் மட்டுமே வென்றுள்ள சீனா, 2002-க்குப் பிறகு மிகக் குறைந்த பதக்கங்களை இம்முறை பதிவு செய்துள்ளது.
பளுதூக்குதல் மற்றும் கூடைப்பந்து: பளுதூக்குதலில் வடகொரியாவை விடப் பின் தங்கி சீனா அதிர்ச்சி அளித்தது. அதேபோல், ஆடவர் கூடைப்பந்து பிரிவில் லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் சென்ற சீனா, வெண்கலப் பதக்கத்தைத் தாண்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறத் தவறியது.
டேபிள் டென்னிஸில் 36 ஆண்டுகள் இல்லாத தோல்வி, பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் 52 ஆண்டுகள் இல்லாத பதக்கமின்மை எனப் பல பின்னடைவுகளைச் சந்தித்துள்ள சீனா, வரவிருக்கும் ‘LA28’ லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாகத் தனது விளையாட்டுத் திட்டங்களை உடனடியாகச் சீரமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.



