நாட்டின் தலைநகர் டெல்லியில் பல தசாப்தங்களாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவதற்கான முக்கிய மையமாக விளங்கிவந்த ‘ஜந்தர் மந்தர்’ பகுதி, இனி அதிகாரப்பூர்வ போராட்ட களமாகச் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி காவல் துறை வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, ஜந்தர் மந்தர் பகுதிக்கான போராட்ட அனுமதிகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு, அதற்கு மாற்றாக 3 புதிய மாற்று இடங்கள் போராட்டக் களங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 11, 2026 தேதியிட்ட இந்த உத்தரவில் டெல்லி காவல் ஆணையர் அனுராக் குமார் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, கிழக்கு டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானம், புராடி மைதானம் மற்றும் சிபிடி (CBD) மைதானம் ஆகியவை போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான புதிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் பரிந்துரையின் பேரில், மக்களின் போராட்ட உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இந்த மூன்று இடங்கள் புதிய போராட்டக் களங்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்து பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்திலேயும், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று புதிய இடங்களில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது தொடர்பான விரிவான மற்றும் திருத்தப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) தனியாக வெளியிடப்படும் என்று டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த அறிவிப்பு கடந்த 2022 ஏப்ரல் 28 அன்று வெளியிடப்பட்ட முந்தைய உத்தரவின் திருத்தப்பட்ட வடிவமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



